களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
தாக்குதல் பயிற்சியில் B-52 அணு குண்டுவீச்சு விமானம் களமிறக்கப்பட்ட நிலையில், வெனிசுலா மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பறக்கும் பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆபத்தான சூழ்நிலை
அமெரிக்காவின் ஃபெடரல் விமான போக்குவரத்து நிர்வாகமானது உள்ளூர் நேரப்படி மதியம் 1.08 மணிக்கு விமானிகள், விமானங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு NOTAM எச்சரிக்கை விடுத்தது.

வெனிசுலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதில குறிப்பிட்டுள்ளது. இதனையடுத்து சில மணி நேரத்தில் B-52 அதனுடன் KC-135 மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா தாக்குதல் பயிற்சியில் ஈடுபடுத்தியது.
FAA வெளியிட்ட அறிவிப்பில், வெனிசுலா அல்லது அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் அதிகரித்த இராணுவ நடவடிக்கைகள் குறித்து எச்சரித்திருந்தது.
இந்த எச்சரிக்கையானது குறிப்பாக கொலம்பியா, கயானா, பிரேசில் மற்றும் டிரினிடாட் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருந்தும்.
பனிப்போருக்குப் பிறகு கரீபியன் பகுதியில் அமெரிக்க துருப்புக்கள் மிகப்பெரிய அளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், வெனிசுலா மீதான தாக்குதலுக்கு வாய்ப்பிருப்பதை திங்களன்று ட்ரம்ப் மறுக்கவில்லை.

நல்லவராக இல்லை
இருப்பினும் வென்சுலாவின் மதுரோவுடன் இந்த விவகாரம் தொடர்பில் அநேகமாகப் பேசுவேன் என்றும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, சில மணி நேரங்களுக்குப் பிறகு, ட்ரம்ப் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக மதுரோ கூறினார்.
ஆனால், மதுரோ அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டார் என்று கூறியதுடன், அவர் அமெரிக்காவிற்கு நல்லவராக இல்லை என்றும் அதனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மதுரோ பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவின் அரசியல் எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். குறிப்பாக ஜூலை 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் மதுரோ பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அந்தப் பேச்சுவார்த்தைகள் சுதந்திரமான மற்றும் ஜனநாயக முறைப்படியானத் தேர்தலுக்கு வழி வகுக்கும் வகையில் ஒப்பந்தங்களில் முடிவடைந்தன. ஆனால், தமக்கு சாதகமாக தேர்தல் முறைகேடுகளில் அவர் ஈடுபட்டார் என்றே அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |