20 ஆண்டுகளில் இல்லாத அரிய வகை வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்! விமானத்தில் வந்த சக பயணிகள் தேடல்
அமெரிக்காவில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் அரிய நிகழ்வாக ஒருவர் மங்கிபாக்ஸ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒருவர் நைஜீரியா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு சமீபத்தில் திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், உடனடியாக இது கொரோனாவாக இருக்கலாம் என்று அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அவருக்கு மங்கிபாக்ஸ் என்ற வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மங்கிபாக்ஸ் வைரசின் பாதிப்பு ஏற்பட்ட நபர் டல்லாஸ் நகரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் லாகோஸ் நகரில் இருந்து நைஜீரியா, டல்லாஸ் என பயணம் செய்து வந்துள்ளார். எனவே அவருடன் விமான பயணம் செய்த பயணிகளை தொடர்பு கொள்ளும் பணியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த மங்கிபாக்ஸ் வைரசானது தொடக்கத்தில் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுத்தும். அதன்பின் சிறிய கட்டிகள் போன்ற வீக்கம் ஏற்படுத்தும்.
முகம் மற்றும் உடல் முழுவதும் பரவும். 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும். பெரியம்மை உடன் தொடர்புடைய இந்த வைரஸ் பாதிப்பு அரிய நிகழ்வு என்றாலும் தீவிர நோய் தன்மை ஏற்படுத்த கூடியது என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.