கொண்டை ஊசி விற்றே சொந்தமாக வீடு வாங்கிய 30 வயது பெண்! ஆச்சரிய தகவல்
அமெரிக்காவில் கொண்டை ஊசி விற்று இளம் பெண் ஒருவர் சுமார் 80 ஆயிரம் டொலர் மதிப்புமிக்க வீட்டை வாங்கியுள்ளார் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்தவர் டெமி ஸ்கிப்பர்(30). டிக்-டாக் மூலம் பிரபலம் ஆன இவர், அதன் பின் வர்த்தக நோக்கத்தில் அவர் டிக்-டாக் விடியோக்களை பதிவேற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது வீட்டில் இருந்தபடியே அதிக அளவு நேரத்தை யூடியூபில் விடியோக்களைப் பார்ப்பதில் செலவிட்டுள்ளார்.
அப்போது டெட் எக்ஸ் டால்க்ஸ் என்ற யூடியூப் தளத்தில் வர்த்தகம் தொடர்பான சொற்பொழிவைப் பார்த்ததால், ஈர்க்கப்பட்ட இவர், டிக்-டாக் மூலம் வர்த்தகம் செய்யும் பாணியை கையாளத் தொடங்கினார்.
அதன் படி, டிக்-டாக் விடியோக்களின் மூலம் கொண்டை ஊசிகளை விற்பனை செய்யத் தொடங்கினார். இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது அவரது பக்கத்தை 50 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
தற்போது ஆப்பிள் செல்போன், மினி கூப்பர் கார், டிராக்டர்கள் போன்றவற்றை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார்.
இதற்காக அந்தந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் ஸ்கிப்பர், அந்த நிறுவனத்தின் பொருள்களை தன்னுடைய டிக்-டாக் பக்கத்தில் அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறார்.
கொண்டை ஊசி விற்பனையில் தொடங்கிய இந்த முறை வர்த்தகத்தால் ஒன்றரை ஆண்டுகளில் சொகுசு கார் உட்பட சொந்தமாக சுமார் 80 ஆயிரம் டொலர் மதிப்பு கொண்ட வீடு ஒன்றையும் வாங்கியுள்ளார்.