புலம்பெயர் மக்கள் தாமாகவே வெளியேற உதவித்தொகையை அறிவித்த அமெரிக்கா
அமெரிக்காவில் ஆவணமற்ற புலம்பெயர் மக்கள் தாங்களாகவே தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதை ஊக்குவிக்கும் நோக்கில், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) ஒரு புதிய சலுகையை அறிவித்துள்ளது.
3,000 டொலர்
இந்தத் திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு இறுதிக்குள் CBP ஹோம் மொபைல் செயலி மூலம் தாங்களாகவே நாடு திரும்புவதற்குப் பதிவு செய்யும் புலம்பெயர்ந்தோருக்கு, 3,000 டொலர் உதவித்தொகையுடன், இலவச விமானப் பயணமும் வழங்கப்படும்.

மட்டுமின்றி, நாட்டில் அதிக காலம் தங்கியிருந்ததற்காகவோ அல்லது நாட்டை விட்டு வெளியேறத் தவறியதற்காகவோ விதிக்கப்பட்ட எந்தவொரு அபராதங்கள் அல்லது தண்டனைகளிலிருந்தும் குறித்த திட்டத்தில் இடம்பெறுபவர்கள் மன்னிப்புப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும் DHS தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் ஆவணமற்ற குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான விரிவான முயற்சியின் ஒரு பகுதியே இந்த ஊக்கத்தொகை என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிறிஸ்டி நோம் கூறியுள்ளார்.
நீண்ட காலத் தடை
ஜனவரி 2025 முதல், 1.9 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் தானாக முன்வந்து சுயமாக வெளியேறியுள்ளனர், மேலும் பல்லாயிரக்கணக்கானோர் CBP திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளனர் என்றும் நோயெம் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தகுதியுள்ள நபர்கள் இந்த வாய்ப்பு ஆண்டின் இறுதியில் காலாவதியாவதற்குள் பயன்படுத்திக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்படுகிறது.

இதனிடையே, சுயமாக வெளியேற முடிவு செய்யாத புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டு, கட்டாயமாக வெளியேற்றப்படுதல் மற்றும் அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைவதற்கு நீண்ட காலத் தடை போன்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |