வெறும் $1 டாலருக்காக வங்கியை கொள்ளையடித்த 65 வயது முதியவர்: அமெரிக்காவில் விசித்திர சம்பவம்
அமெரிக்காவில் வங்கியில் இருந்து $1 பணத்தை கொள்ளையடித்த 65 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வங்கி பணம் கொள்ளை
அமெரிக்காவின் மேற்கு மாநிலமான உட்டாவின் தலைநகர், சால்ட் லேக் சிட்டியின், 300 தெற்கு பிரதான தெருவுக்கு அருகிலுள்ள வங்கியில் 65 வயதான டொனால்ட் சான்டாக்ரோஸ் என்பவர் திங்கட்கிழமை நுழைந்து பணத்தை கொள்ளையடிக்க வந்து இருப்பதாக ஊழியர்களை மிரட்டியுள்ளார்.
மேலும் சந்தேக நபர் வங்கி ஊழியர்களிடம் இருந்து பணத்தை பெறாமல் வங்கியை விட்டு வெளியேற மாட்டேன் என மறுத்துள்ளார்.
இதையடுத்து அவர் கேட்ட பணத்தை கொடுத்த வங்கி ஊழியர்கள், பொலிஸாரிடமும் தகவலை தெரிவித்து எச்சரித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து வங்கியைக் கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 65 வயது நபரை கைது செய்ததை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
$1 கொள்ளை
காவல்துறை வழங்கிய செய்தி வெளியிட்டில், இந்த கொள்ளை சம்பவத்தின் போது வங்கி கணக்காளரிடம் சாண்டாக்ரோஸ் எவ்வளவு பணம் கோரினார் என்பதை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
ஆனால் காவல்துறை முன்பதிவு வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி, KSL-TV என்ற உள்ளூர் செய்தி நிறுவனம் வெளியிட்ட குறிப்பில், "இதைச் செய்ததற்காக என்னை மன்னியுங்கள், ஆனால் இது ஒரு கொள்ளை. எனக்கு $1 கொடுங்கள். நன்றி" என்று சான்டாக்ரோஸ் கூறியதாக தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவரின் நோக்கம் என்னவென்று சால்ட் லேக் நகர காவல் துறை செய்தி வெளியீட்டில் கூறவில்லை. ஆனால் கைது அறிக்கையில், "கைது செய்யப்பட்டு மத்திய சிறைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இதை செய்ததாக டொனால்ட் கூறினார்” என குறிப்பிட்டுள்ளது.
மேலும் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தால் வேறொரு வங்கியைக் கொள்ளையடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் $1 கொள்ளை என்பது முதல்முறையானது அல்ல, கடந்த 2011ம் ஆண்டு காப்பீடு இல்லாத 59 வயது நபர், சிறையில் உடல்நலம் பெறுவதற்காக வட கரோலினா வங்கியில் $1 கொள்ளையடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.