ரஷ்யா மீதான ட்ரம்பின் தடைகள்... பிரித்தானியாவை இது எவ்வாறு பாதிக்கும்: விரிவான விளக்கம்
ரஷ்யாவின் மிகப் பெரிய இரு எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகள் விதித்துள்ள நிலையில், பிரித்தானியாவில் அதன் தாக்கம் எவ்வாறாக இருக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
துணை நிறுவனங்கள்
ஒரு பெரிய கொள்கை மாற்றம் என குறிப்பிடும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளார்.
இது உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவின் இரண்டு மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil ஆகியவை மீதும், அத்துடன் டசின் கணக்கான துணை நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான இந்த இரு நிறுவனங்களும் ஒரு நாளைக்கு 3.1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்துள்ளது. அரசு நிறுவனமான Rosneft மட்டுமே ரஷ்யாவின் எண்ணெய் உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் முன்னெடுக்கிறது.
அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், Rosneft நிறுவனமானது பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் ஆய்வு, பிரித்தெடுத்தல், உற்பத்தி, சுத்திகரிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனையில் நிபுணத்துவம் பெற்றதாகும்.
Rosneft மற்றும் Lukoil நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்ததும் ஐரோப்பாவும் தனது பங்கிற்கு இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் கப்பல் போக்குவரத்தில் உள்ள ஓட்டைகளை இறுக்கி, ரஷ்யா மீது அழுத்தத்தைக் குவித்தது.
விலை அதிகரிக்கும்
இந்த நிலையில், அமெரிக்கத் தடைகள் ரஷ்ய எண்ணெய் உற்பத்தியைப் பாதித்ததால் எண்ணெய் விலை உயர்ந்தது. Benchmark எண்ணெய் விலையானது 5 சதவீதம் அதிகரித்தது.
அமெரிக்காவின் Benchmark கச்சா எண்ணெய் 2.70 டொலர் அதிகரித்து பீப்பாய் ஒன்றிற்கு 61.21 டொலராக உயர்ந்தது. அதேவேளை Brent கச்சா எண்ணெய் 2.85 டொலர் அதிகரித்து பீப்பாய் ஒன்றிற்கு 65.44 டொலர் என விற்பனையானது.
மேலும் எண்ணெய் வரத்து சரிவடைய விலை எகிறும் என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. இதனால் பிரித்தானியாவிலும் எண்ணெய் விலை அதிகரிக்கும். ரஷ்ய அரசு நிறுவனமான Rosneft மீதும் தனியார் நிறுவனமான Lukoil மீதும் ஐரோப்பாவும் பிரித்தானியாவும் ஏற்கனவே தடைகளை விதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |