கோவிட் பரவ காரணமான வூஹான் ஆய்வகத்திற்கு நிதியளித்த அமெரிக்க விஞ்ஞானி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முன்னாள் தலைமை மருத்துவ ஆலோசகரான அந்தோனி ஃபௌசி, சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் ஆராய்ச்சிகளுக்காக நிதியுதவி அளித்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆராய்ச்சிக்கு நிதியளிக்க
குறித்த ஆய்வகத்தில் இருந்தே உலக நாடுகளை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்த கோவிட் பெருந்தொற்று பரவியதாகப் பரவலாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பதவி விலகவுள்ள அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் (DNI) துல்சி கப்பார்ட் என்பவரே வியாழக்கிழமை தொடர்புடையத் தரவுகளை வெளியிட்டுள்ளார்.
வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் வௌவால் கொரோனா வைரஸ்கள் மீதான அபாயகரமான செயல்பாட்டு மேம்பாட்டு ஆராய்ச்சிக்கு நிதியளிக்க, ஃபவுசி அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் மில்லியன் கணக்கான டொலர்களை வழங்கினார் என்று கப்பார்ட் கூறியுள்ளார்.
2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் கோவிட் பரவியபோது, அதைக் கையாள்வதில் பைடன் நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியவர் ஃபௌசி.
அத்துடன், கோவிட் தொற்று ஆய்வகத்திலிருந்து கசிந்ததற்கான உண்மையை மறைக்க, அரசியல்மயமாக்கப்பட்ட அதிகார வர்க்கத் தலைமையுடன் ஃபௌசி இணைந்து செயல்பட்டார் எனவும் அறிக்கை ஒன்றில் கப்பார்டின் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி, டிசம்பர் 2022-ல் பதவி விலகும் வரை 38 ஆண்டுகளாக தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய்கள் நிறுவனத்திற்கு (NIAID) தலைமை தாங்கிய 85 வயதான ஃபௌசி,
பெரும் மருந்து நிறுவனங்களுடன் தொடர்புடைய மற்றும் பல டிரில்லியன் டொலர் மதிப்புள்ள உலகளாவிய தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியை உள்ளடக்கிய ஆபத்தான கொரோனா வைரஸ் ஆராய்ச்சிக்கு நிதியளித்துள்ளார் என்றும் துல்சி கப்பார்ட் தரப்பில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கோவிட் தொடர்பில் உண்மைகளை நாட்டு மக்களிடம் இருந்து ஃபௌசி மறைத்தார் என்றும் கப்பார்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஃபௌசி பொய் கூறினார்
கோவிட் பெருந்தொற்று, நம் சக அமெரிக்கர்கள் பல மில்லியன் பேருக்கும் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களுக்கும் பெரும் துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ள அவர்,
பல ஆண்டுகளாக நீடித்த பொய்கள், தணிக்கை மற்றும் உண்மைகளை மறைக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றிற்குப் பிறகு, வெளிப்படைத்தன்மை, உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கு அமெரிக்க மக்கள் தகுதியானவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜூன் 2024-இல் நாடாளுமன்றக் குழுவின் முன் பகிரங்கமாக சாட்சியம் அளித்தபோது ஃபௌசி பொய் கூறினார் எனவும் கப்பார்ட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணையின்போது, பெருந்தொற்றுக்கு முன்னரோ, அதன் போதோ அல்லது அதற்குப் பின்னரோ, வைரஸ் தொடர்பான ஆராய்ச்சி குறித்து FBI, CIA, DIA அல்லது அமெரிக்காவின் வேறு ஏதேனும் உளவு அமைப்பிடம் பேசினாரா என்று ஃபௌசியிடம் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டது.
ஃபௌசி கேள்விகளைத் தொடர்ந்து தவிர்த்ததுடன், கோவிட் குறித்து தனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் இல்லை என்றும் தவறான தகவலைக் கூறினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |