ட்ரம்பைப் போல் அமெரிக்க அதிகாரிகளும் கனடாவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கிறார்களா? தெரியவந்த உண்மை நிலவரம்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கனடாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார்.
ஆனால், கனடா குறித்த அமெரிக்க செனேட்டர்களின் நிலைப்பாடு என்ன?
கனடா பிரதமரை சந்தித்த அமெரிக்க செனேட்டர்கள் கூறியுள்ள செய்தி
அமெரிக்க செனேட்டர்கள் குழு ஒன்று, நேற்று கனடா பிரதமரான மார்க் கார்னியை சந்தித்தது. அந்தக் குழுவில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய அமெரிக்காவின் இரண்டு முக்கிய கட்சிகளைச் சேர்ந்த செனேட்டர்களும் இடம்பெற்றிருந்தனர்.
விடயம் என்னவென்றால், அவர்களும் ட்ரம்பைப் போல கனடாவுடன் மோதல் போக்கைக் கொண்டிருக்கவில்லை என்பது அவர்களுடைய பேச்சில், நடவடிக்கைகளில் தெரியவந்துள்ளது.
சொல்லப்போனால், ட்ரம்பால் பாதிக்கப்பட்டுள்ள இருதரப்பு உறவுகளை சீர்ப்படுத்துவதற்காகவும், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்வதற்காகவும்தான் அவர்கள் கனடாவுக்கே வந்துள்ளார்கள்.
கனடா பிரதமரான மார்க் கார்னியுடனான சந்திப்பைத் தொடர்ந்து பேசிய, வடக்கு டகோடா செனேட்டரான கெவின் க்ராமர், பிரதமருடனான சந்திப்பு உற்சாகம் ஏற்படுத்துவதாக இருந்ததாகவும், தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து முன்னேறத் தூண்டும் வகையில் அந்த சந்திப்பு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல, நியூ ஹாம்ப்ஷையர் செனேட்டரான ஜீன் ஷஹீன் கூறும்போது, இந்த சந்திப்பு, சமீபத்திய சில மாதங்களாக இருதரப்பு உறவில் ஏற்பட்ட பிரிவை சரிசெய்யும் வகையில் நேர்மறையான விவாதங்களுடன் தொடரும் என்றும், நாம் இணைந்து முன்னேறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க செனேட்டர்கள் கூறும்போது, இருதரப்புக்கும் இடையிலான பிளவு அமெரிக்கர்களுக்கும் கடினமான ஒன்றாகத்தான் உள்ளது என்றும், குறிப்பாக, கனடாவை ஒட்டி அமைந்துள்ள மாகாணங்களை அது கடுமையாக பாதித்துள்ளது என்றும் கூறியுள்ளார்கள்.
அதை நாங்கள் ஒவ்வொரு நாளும் உனர்ந்தோம் என்று கூறும் மின்னசோட்டா செனேட்டரான ஏமி க்லோபுக்கர், அது கடினமான ஒன்றாக இருந்தது என்பது எங்களுக்குத் தெரியும் என்றும், அதை சீர் செய்வதற்காகவே நாங்கள் கனடாவுக்கு வந்திருக்கிறோம் என்றும் கூறினார்.
மேலும், நாம் இணைந்து செயல்பட்டால், நம் இரண்டு நாடுகளுமே வளர்ச்சியடைய மிகப்பெரிய வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆக, கனடாவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது ட்ரம்பும் அவரது ஆதரவாளர்கள் சிலரும்தான் என்பதும், அது அமெரிக்க மக்கள் கருத்தோ, ஆளும் அதிகாரிகளின் கருத்தோ அல்ல என்பதும் தெளிவாகத் தெரியவந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |