பிரித்தானியாவில் அமெரிக்க மாணவருக்கு ஆயுள் சிறை தண்டனை: கொல்லப்பட்ட சீன மாணவி
அமெரிக்க மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீன மாணவி உயிரிழப்பு
லண்டன் கோல்ட்ஸ்மித்ஸ்(Goldsmiths) பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த 31 வயது சீன மாணவி ஷே வாங்(zhe wang) கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் 26 வயது ஜோஷுவா மைக்கல்ஸ்(Joshua Michals) என்ற அமெரிக்க மாணவர் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை லண்டனின் ஓல்ட் பெய்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் ஜோஷுவா மைக்கல்ஸ் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை குற்றத்திற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் அவருக்கு குறைந்தது 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொலையில் முடிந்த உறவு
முதுகலைப் பட்டம் பயின்று வந்த ஷே வாங் மற்றும் ஜோஷுவா மைக்கல்ஸ் இருவரும் 2023ம் ஆண்டு சந்தித்து கொண்ட நிலையில் 2024ம் ஆண்டு இருவருக்கும் இடையே உறவு நெருக்கமாகியுள்ளது.
தூய்மை விஷயத்தில் அதிக அக்கறை கொண்ட ஷே, மைக்கல்ஸ் உடன் உறவு வைத்துக் கொண்ட பிறகு உடலில் ஏற்பட்ட தடுப்புகளால் தனக்கு பாலியல் ரீதியான தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அச்சமடைந்து மைக்கல்ஸை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துள்ளார்.
ஆனால் அதற்கு மைக்கல்ஸ் மறுப்பு தெரிவித்துள்ளார், இதனால் இருவருக்கும் இடையிலான உறவில் மோதல் வெடித்துள்ளது.
பின்னர் மார்ச் 20, 2024 அன்று ஷே-வை சமாதானப்படுத்துவதற்காக அவரது இல்லத்திற்கு சென்ற மைக்கல்ஸ், அப்போது அங்கு ஏற்பட்ட மோசமான நிலைமை காரணமாக ஷே வாங்க்கின் கழுத்தை நெரித்தும், கத்தியால் முகத்தில் குத்தியும் தாக்கியுள்ளார்.
மேலும் அவரை உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
நீதிமன்றத்தில் இது தற்காப்பு நடவடிக்கை என்று வாதிடப்பட்டாலும், அதை நீதிபதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |