விசா பிணைத் தொகைத் திட்டத்தை நிரந்தரமாக்கும் அமெரிக்கா... டசின் கணக்கான நாடுகள் இணைப்பு
US to make visa bond program permanent: விசா பிணைத் தொகைத் திட்டத்தை நிரந்தரமாக்க அமெரிக்கா முடிவு.
50 நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களை உள்ளடக்கியிருக்கக்கூடிய விசா பிணைத் தொகைத் திட்டத்தை (visa bond program) அமெரிக்க வெளிவிவகாரத் துறை நிரந்தரமாக்கவுள்ளது.
விசா பிணைத் தொகை
பெரும்பாலும் ஆப்பிரிக்காவிலிருந்து வருபவர்கள், அமெரிக்க விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது 20,000 டொலர் வரையிலான பிணைத் தொகையைச் செலுத்த வேண்டியுள்ளது.

அமெரிக்காவிற்கு தொழில்முறை அல்லது சுற்றுலா விசாவில் செல்வோர் தங்களுடைய விசா காலம் முடிந்தவுடன் சொந்த நாட்டிற்குத் திரும்புவதை உறுதி செய்வதற்காக அமெரிக்க அரசு இத்திட்டத்தை வைத்துள்ளது.
முறைகேடாக அமெரிக்காவில் குடியேற வேண்டும் என திட்டமிடுவோர் இந்த அதிகப்படியான விசா பிணைத் தொகைக் கட்டணத்தைச் செலுத்த முடியது என்பதால் B1, B2 விசா கீழ் செல்வோர் மீது இந்த கட்டணம் விதிக்கப்படுகிறது.
இந்த தொகை ஒரு பாதுகாப்பு தொகை மட்டுமே என்பதால் இதைச் சொந்த நாட்டிற்குத் திரும்பிய பின்னர் உரிய நபருக்குத் திரும்பிச் செலுத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.
இதனால் அமெரிக்காவில் இருக்கும் காலத்திற்கு மட்டுமே இந்த தொகை அமெரிக்கத் தூதரக அமைப்பிடம் இருக்கும். விசா காலாவதியான பிறகும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதே இக்கொள்கையின் நோக்கம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், இது அமெரிக்காவிற்கான முறையான பயணங்களைத் தடுக்கும் என்று குடியேற்ற உரிமை ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். தொழில்முறை மற்றும் சுற்றுலா நோக்கங்களுக்காக வழங்கப்படும் B1 மற்றும் B2 விசாக்களுக்கு இந்தக் கொள்கை பொருந்தும்.
இந்தியாவின் அண்டை நாடுகளில், வங்கதேசம், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகியவை பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன; ஆனால் இந்தியா இதில் இடம்பெறவில்லை.
30 நாடுகள் ஆப்பிரிக்காவில்
இந்த விதிமுறையின்படி, தகுதியுள்ள விசா விண்ணப்பதாரர்கள், விசா வழங்குவதற்கான ஒரு நிபந்தனையாக, ஒவ்வொரு வழக்கைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் தொகையுடன் ஒரு பிணைப்பத்திரத்தைச் சமர்ப்பிக்குமாறு கோருவதற்குத் தூதரக அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு.

டொனால்ட் ட்ரம்பின் விரிவான குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கைகள், பேச்சு சுதந்திரத்தையும் சட்ட நடைமுறைகளையும் சீர்குலைப்பதோடு, இன சிறுபான்மையினரிடையே அச்சச் சூழலை வளர்த்து, இன ரீதியான பாகுபாட்டின் அபாயத்தையும் அதிகரிக்கின்றன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த விதிமுறை, 'ஃபெடரல் ரெஜிஸ்டர்' (Federal Register) இதழில் வெளியிடப்படும் நாளான ஆகஸ்ட் 3-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் அடங்கும் 50 நாடுகளில், 30 நாடுகள் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளன.