முடிவுக்கு வராத ஈரான் போர்... கடும் நெருக்கடியில் அமெரிக்காவின் ஆயுத இருப்புகள்
சமீபத்திய வாரங்களில் ஈரானுடனான மோதல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, முக்கியமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உட்பட அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்புகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அதிக ஆபத்தை எதிர்கொள்ள
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதியான தீர்வு இன்னும் எட்டப்படாமல் ட்ரம்ப் நிர்வாகம் தத்தளித்து வரும் நிலையில், ஏவுகணைகளின் பற்றாக்குறை, பிற முனைகளில் அமெரிக்கா மோதலில் ஈடுபடும் திறனைப் பாதிக்கக்கூடும் என்றே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

திங்களன்று வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், அமெரிக்காவிடம் தற்போது 827-க்கும் குறைவான பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளும், 278-க்கும் குறைவான தாட் பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பு ஏவுகணைகளும் எஞ்சியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
போருக்கு முந்தைய அமெரிக்க ராணுவத்தின் ஆயுத இருப்பானது CSIS-இன் மதிப்பீட்டின்படி, சுமார் 2,200 'பேட்ரியாட்' ஏவுகணைகளும் (அவற்றின் மிகவும் நவீனமயமாக்கப்பட்ட இரண்டு வகைகளைச் சேர்ந்தவை) 452 'தாட்' (THAAD) பாலிஸ்டிக் ஏவுகணைகளும் இருந்தன.
இவை அமெரிக்க ராணுவம் தங்களை நோக்கி வரும் எதிரியின் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான முதன்மையான அமைப்புகளாகும்; மேலும், ஒவ்வொரு இடைமறிப்பு ஏவுகணையின் விலையும் பல மில்லியன் டொலர்கள் ஆகும்.
இந்த நிலையில், CSIS அறிக்கையின் ஆசிரியர்கள் குறிப்பிடுகையில், குறைந்துவிட்ட ஆயுதக் கையிருப்பு, அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் அதிக ஆபத்தை எதிர்கொள்ள நிர்பந்திக்கக்கூடும்.
பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு பேட்ரியாட் மற்றும் தாட் (THAAD) ஏவுகணை அமைப்புகள் போன்ற சிறந்த மாற்று வழிகள் எதுவும் இல்லை. அத்தகைய அச்சுறுத்தல்களை இடைமறிக்கக்கூடிய சாதாரண ஏவுகணைகளைக் கொண்ட கடற்படைக் கப்பல்கள், பொதுவாக மிகவும் தொலைவில் உள்ளன.
திங்களன்று ஆயுதங்களின் கையிருப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது, மிகவும் மேம்பட்ட ரகங்களை மீண்டும் நிரப்ப விரும்புவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார், ஆனால் கையிருப்பு மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கூட்டுத் தலைமைப் படைத் தலைவர்களின் (Joint Chiefs of Staff) தலைவரான ஜெனரல் டான் கெய்ன், தங்களுக்குத் தேவைப்படும் கூடுதல் நிதி கிடைக்காவிட்டால், இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் கிடைக்காது என்று கடந்த வாரம் செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஈரான் மீதானப் போரைத் தீவிரமாக விரிவுபடுத்துவது குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் பரிசீலித்துக்கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையன்று அவருடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆயுத இருப்பு குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டியதாக ஜெனரல் கெய்ன் கூறியதாக CNN செய்தி வெளியிட்டிருந்தது.
மோதலைத் தீவிரப்படுத்துவதால் ஏற்படக்கூடிய கூடுதல் பாதகமான விளைவுகள் குறித்து ஜெனரல் கெய்ன் மற்றும் பிற தளபதிகள் விளக்கமளித்ததைத் தொடர்ந்து, அந்தச் சந்திப்பிற்குப் பிறகு ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
பல ஆண்டுகள் ஆகலாம்
ஆனால், அந்த இடைநிறுத்தம் குறுகிய காலமே நீடித்திருக்கலாம். செவ்வாய்க்கிழமையன்று, ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்க மற்றும் சவுதிப் படைகள் கூட்டுத் தாக்குதல்களை நடத்தின.
மேலும், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் ஒன்றை முறியடித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த மாதத் தொடக்கத்தில், ஈரானுடனான தொடர் மோதல் ஆயுத இருப்பை மிகக் குறைந்த நிலைக்குக் குறைக்கக்கூடும்;
இது சீனா அல்லது வட கொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அமெரிக்க ராணுவத்தின் திறனைப் பாதிக்கக்கூடியதாக அமையலாம் என ஓய்வுபெற்ற மரைன் கார்ப்ஸ் கர்னல் மார்க் கேன்சியன் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகள் போன்ற அதிநவீன ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு நீண்ட காலம் தேவைப்படுவதால், அமெரிக்காவின் ஆயுத இருப்பை முழுமையாக மீண்டும் நிரப்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆயுதப் பற்றாக்குறைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகமே பெரும்பாலும் காரணம் என்று ட்ரம்ப்பும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்ஸெத்தும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆனால், இஸ்ரேல் காரணமாக ஈரானுடன் உருவானப் போரினால் இந்தப் பிரச்சினை மிகவும் மோசமடைந்துள்ளது என்றே CSIS அறிக்கையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |