மரண அடி வாங்கிய ஸ்கொட்லாந்து: பறிபோன முதலிடம்
அமெரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஸ்கொட்லாந்து படுதோல்வியடைந்தது.
ஐசிசி கிரிக்கெட் உலகக்கிண்ண லீக் 2 தொடர் போட்டியில் ஸ்கொட்லாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின.

முதலில் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணியில் முன்ஸி 19 ஓட்டங்களிலும், பிரண்டன் மெக்முல்லன் 32 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
நெத்ரவால்கரின் மிரட்டலான பந்துவீச்சில் பெர்ரிங்டன், இங்கிலீஷ் டக்அவுட் ஆகினர். மேத்யூ கிராஸ் 20 ஓட்டங்களில் வெளியேற ஸ்கொட்லாந்து அணி 103 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் என தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மார்க் வாட் (Mark Watt) அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.
85 பந்துகளில் 66 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள்) விளாசிய வாட் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க, ஸ்கொட்லாந்து அணி 169 ஓட்டங்களுக்கு (43.3 ஓவர்கள்) சுருண்டது. ருஷில் உகர்கர் 4 விக்கெட்டுகளும், சௌரப் நெத்ரவால்கர் 3 விக்கெட்டுகளும், ஷுபம் ரஞ்சனே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய அமெரிக்க அணி 27.1 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 170 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஸ்மித் பட்டேல் 37 ஓட்டங்களும், ஷயான் ஜஹாங்கிர் 37 ஓட்டங்களும், சாய்தேஜா முக்கமல்ல 35 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஸ்கொட்லாந்தை பின்னுக்குத் தள்ளி அமெரிக்க அணி முதலிடம் பிடித்தது.
இரு அணிகளும் 38 புள்ளிகள் கொண்டிருந்தாலும், அமெரிக்க அணி ரன்ரேட் (+0.888) அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |