பறக்கும் மின்சார வாகனத்தை உருவாக்கிய இந்தியர்; பொறியியல் பட்டம் கூட இல்லை
uttarakhand man built electric flying car without engineering degree: பொறியியல் பட்டம் கூட பெறாத இந்தியாவை சேர்ந்த ரவி தம்டா, பறக்கும் மின்சார வாகனத்தை உருவாக்கியுள்ளார்.
பறக்கும் மின்சார வாகனத்தை உருவாக்கிய இந்தியர்
பிரபல மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, சமீபத்தில் பறக்கும் Roadster காரின் செயல் விளக்க வீடியோவை வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்தது.

ஆனால், இது பொதுவாக சாலையில் செல்வதாகவும், சில நொடிகளுக்கு பறக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு நபர் பறக்கும் மின்சார வாகனத்தை உருவாக்கியுள்ளார்.
காஃப்லிகான் கிராமத்தை சேர்ந்த ரவி தம்டா(Ravi Tamta), மலைப்பாங்கான பகுதியில் வசித்து வந்ததால், வளைந்து நெளிந்த சாலைகளும் கடினமான நிலப்பரப்பும், குறிப்பாக ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போது, ஒப்பீட்டளவில் ஒரு குறுகிய பயணத்தை நீண்ட பயணமாக மாற்றிவிடக்கூடும் என கருதினார்.

இதனால் பயண தூரத்தை குறைக்கும் வகையில், கடினமான நிலப்பரப்புகளில் பயணிக்கக்கூடிய, மற்றும் ஓடுபாதை தேவையின்றி தரையிறங்கக்கூடிய,செங்குத்தாக மேலெழும்பி பறக்கும் வாகனத்தை உருவாக்க திட்டமிட்டார்.
பொறியியல் பட்டம் கூட பெறாத ரவி தம்டா, இணையம் மூலமே கற்றுக்கொண்டு 13 ஆண்டு கால முயற்சியில், ஒற்றை நபர் அமர்ந்து பறக்க கூடிய ஹபிடா ஸ்கைனெக்ஸ் என்ற மின்சார வாகனத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த வாகனம், ஓடுபாதை இல்லாமல், செங்குத்தாகப் புறப்பட்டுத் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், மல்டிரோட்டர் ட்ரோன்களைப் போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பல மின்சார மோட்டார்கள் மற்றும் சுழலிகளைக் கொண்டுள்ளது.
மலைப்பாதை வழியாகச் செல்ல ஏறத்தாழ 90 நிமிடங்கள் ஆகும் சுமார் 40 கிலோமீட்டர் பயணத்தை, விமானம் மூலம் 10 முதல் 15 நிமிடங்களில் கடக்க முடியும்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அல்மோராவில் உள்ள திறந்தவெளியில் , HAPIDA SKYNeX வாகனத்தின் முன்மாதிரியை வெற்றிகரமாக சோதனை ஓட்டம் செய்துள்ளார்.
Uttarakhand-based #HapidaSky has successfully flight tested it's Personal Electric Aerial Vehicle called HAPIDA SKYNeX. https://t.co/Pu6Q6G6USs
— IADN (@NewsIADN) August 7, 2026
இந்த வாகனத்தின் பேட்டரி திறன், பறக்கும் நேரம், வேகம், சுமக்கும் திறன் மற்றும் மின்னேற்றும் நேரம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தகவல்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இது வழக்கமான போக்குவரத்திற்காக பயன்பாட்டிற்கு வரும் முன்பு, விமானப் போக்குவரத்து அனுமதிகள், பாதுகாப்புச் சான்றிதழ், வான்வெளி விதிகள் மற்றும் இயக்க நடைமுறைகள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கும்.