என்னது... வாழையிலையில் அல்வா செய்யலாமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே
இதுவரையில் நாம் எத்தனையோ அல்வா வகைகளை சாப்பிட்டிருப்போம். பழங்கள், காய்கறிகள் என வகைவகையான அல்வாக்களை செய்திருப்போம்.
ஆனால், வாழையிலையில் அல்வா செய்து சாப்பிட்டதுண்டா... வாழையிலையில் அல்வாவா? என்று யோசிக்கிறீர்களா...
இதோ வாழையிலை அல்வா செய்வதற்கான குறிப்பை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
வாழையிலை - 2
பூசணி விதை - 1 மேசைக்கரண்டி
சோள மா - கால் கப்
நெய் - 6 மேசைக்கரண்டி
சர்க்கரை - கால் கப்
எலுமிச்சம் பழச்சாறு - 2 மேசைக்கரண்டி
முந்திரி - தேவையான அளவு
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
செய்முறை
முதலில் நடுத்தரமான இரண்டு வாழை இலைகளை எடு்தது நன்றாக சுத்தப்படுத்த வேண்டும். சுத்தப்படுத்திய வாழையிலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் அவற்றை மிக்சியில் போட்டு சிறிதளவு எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் விட்டு, அதில் முந்திரி மற்றும் பூசணி விதைகளை தனித்தனியாக சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். வறுத்தவற்றை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு அதே வாணலியில் மேலும் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து வாழை இலை விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்க வேண்டும்.
அதன் பின்பு சோள மாவில் தண்ணீர் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைத்துக்கொள்ள வேண்டும்.
அதற்கடுத்ததாக வாழை இலை விழுது நன்றாக வதங்கி கெட்டியானதும் அதனுடன் சோள மா கரைசலை போட்டு கட்டிகளில்லாமல் கிளறவேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி, சர்க்கரை என்பவற்றை அதில் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும்.
இறுதியாக அதில் சிறிது சிறிதாக நெய் ஊற்றிக் கிளறி, கலவையானது வாணலியில் ஒட்டாமல் வரும் பதத்துக்கு வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிட வேண்டும்.
இறக்கிய அல்வாவில் வறுத்த முந்திரி, பூசணி விதைகள் என்பவற்றை தூவி அலங்கரிக்கலாம்.