சுவிஸில் 2025 வரை கொரோனா தொற்று நீடிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தில் 35 வயதுக்கு உட்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் கொரோனா தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் பெரும்பாலான தடுப்பூசி மையங்களும் முழுமையாக செயல்பட்டு வருவதுடன், மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் தற்போது 35 வயதுக்குட்பட்ட இளைய சமூகத்தினர் தடுப்பூசி எடுத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.
பலர் கொரோனா தடுப்பூசி வேண்டாம் என்ற முடிவுக்கும் வந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 18-34 வயதுடையவர்களில் 36% பேர்கள் தடுப்பூசிக்கு தயக்கம் காட்டுவதாகவும், பெற்றுக்கொள்வது சந்தேகம் என்றே தெரிவித்துள்ளனர்.
ஆனால் 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஒருவர் மட்டுமே தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், 20 வயதுக்கு உட்பட்ட மக்களும் சுவிஸில் கொரோனா தடுப்பூசிக்கு தயக்கம் காட்டுவதாகவே தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் சுவிஸ் நிபுணர்கள் தெரிவிக்கையில், மக்களிடையே தடுப்பூசிக்கு தயக்கம் ஏற்பட்டுள்ளதால், சுகாதாரத்துறை உடனடியாக களத்தில் இறங்கி மக்களின் தயக்கத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
மக்களிடையே இதே மன நிலை நீடித்தால் கொரோனாவை நாட்டில் இருந்து ஒழிப்பது சாத்தியமில்லாமல் போகும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டுமின்றி தடுப்பூசிக்கு தயக்கம் காட்டும் மக்களால் கொரோனா 2025 வரை நீடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.