இந்த தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு பிரான்ஸ் செல்ல அனுமதியில்லை
இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்டோருக்கு பிரான்சுக்கு வர அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றிய உரிமம் கிடைக்காததுதான் பிரச்சினைக்கு காரணம். இதனால், பிரித்தானியா, இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து பிரான்ஸ் வர விரும்புவோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
அதாவது, ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் தடுப்பூசி, தயாரிக்கப்படும் இடத்தைப் பொருத்து வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி, Vaxzevria என்ற பெயரிலும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி கோவிஷீல்ட் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றன.
இரண்டும் ஒரேவிதமான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டாலும், கோவிஷீல்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை உரிமம் இல்லை. அது இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், ஐரோப்பிய ஒன்றிய உரிமம் பெறுவது குறித்து அதன் தயாரிப்பாளர்கள் சிந்திக்கவில்லை.
ஆனால், ஐரோப்பிய ஒன்றிய பாஸ்போர்ட் விதிகளின்படி ஐரோப்பிய மருந்துகள் ஏஜன்சியால் உரிமம் வழங்கப்பட்ட தடுப்பூசிகள் பெற்றவர்கள் மட்டுமே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆகவே, கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்ட இந்திய மற்றும் ஆப்பிரிக்க பயணிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய முடியாது.
இன்னொரு பிரச்சினை என்னவென்றால், பிரித்தானியாவிலும் பெருமளவில் இந்திய தயாரிப்பான ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டதால், அந்த தடுப்பூசி பெற்றுக்கொண்ட பிரித்தானிய பயணிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் அனுமதி கிடையாது.
அதே நேரத்தில், கோவிஷீல்ட் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை நாட்டுக்குள் அனுமதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளே முடிவு செய்துகொள்ளலாம் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்தியாவும் பிரித்தானியாவும், கோவிஷீல்ட் தடுப்பூசியை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அனுமதிக்கப்படும் தடுப்பூசிகள் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.