தடுப்பூசி பாஸ்போர்ட்டும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம்... கொரோனாவுடனேயே வாழவேண்டியதுதான்: பிரித்தானியா முடிவு
கொரோனாவுடனேயே வாழவேண்டிய நேரம் வந்துவிட்டது, இனி எங்கு சென்றாலும் மக்கள் தடுப்பூசி பாஸ்போர்ட்டை தூக்கிக்கொண்டே அலையவேண்டியதில்லை என பிரித்தானிய அமைச்சர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.
மேலும் மேலும் கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டித்துக்கொண்டே செல்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களும் விருந்தோம்பல் துறையினரும் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில், ஜூலை 19 அன்று கொரோனா கட்டுப்பாடுகளை முற்றிலுமாக விலக்கிக்கொள்வது என பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது. அத்துடன், அன்றே இந்த கொரோனா பாஸ்போர்ட்டுக்கும் முடிவு கட்டுவது என அமைச்சர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றிற்கு செல்லும்போது கொரோனா பாஸ்போர்ட் அவசியம் என்னும் கட்டுப்பாடும் அன்றே விலக்கிக்கொள்ளப்பட உள்ளது.
இது தொடர்பில் கேபினட் கூட்டத்தில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், நமது தடுப்பூசி திட்டத்தின் வெற்றி காரணமாக, இனி பிரித்தானியர்கள் கொரோனாவுடனேயே இணைந்து வாழ முடியும், காரணம், மக்கள் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு ஆளானாலும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது குறைந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
எப்படி ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டு தொடர்ந்து வாழ்க்கை நடத்தினோமோ அதேபோல கொரோனாவையும் கருதும் ஒரு மனநிலைக்கு பிரித்தானியா வந்துவிட்டது. எப்படி இருந்தாலும், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது மக்களை மாஸ்க் அணியச் சொல்வது, மற்றும், வீடுகளிருந்தவண்ணம் வேலை பார்ப்பது போன்ற விடயங்கள் தொடர்பாக இன்னமும் விவாதங்கள் நடைபெற்றவண்ணமே உள்ளன.
அத்துடன், பெரிய இசை நிகழ்ச்சி, கால்பந்துப்போட்டி போன்றவற்றைப் பொருத்தவரை, அவற்றை நடத்துபவர்களே, நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருவோருக்கு கொரோனா உள்ளதா, அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என்பது போன்ற விடயங்களை முடிவு செய்து, அதற்காக தாங்களே திட்டங்களை வகுத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.