தடுப்பூசி போடும் பணி முடங்கிவிடுமா? ஊரடங்கில் மாற்றமா? பிரித்தானியா பிரதமர் போரிஸ் விளக்கம்
பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா தடுப்பூசி விவகாரம் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிரித்தானியாவில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட கூடியவர்கள், மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், வயதானவர்கள் என அடுத்தடுத்த கட்டமாக போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய அரசாங்கம் தற்காலிகமாக தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்திருப்பதாக செய்தி வெளியானது.
இதை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி Adar Poonawalla குறிப்பிட்டார். இதனால், அடுத்த மாதத்திலிருந்து பிரித்தானியாவின் தடுப்பூசி போடும் பணி முடங்கிவிடும் என கூறப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளிக்க பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் இன்று மாலை பிரதமர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகிக்கும் விவகாரத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும், அது இங்கிலாந்தின் ஊரடங்கை எளிதாக்காது, அதனால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்று உறுதியளித்தார்.
மேலும், இங்கிலாந்து மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் சற்று குறைவான தடுப்பூசிகளைப் பெறும் என்றாலும், நாடு அதன் தடுப்பூசி இலக்குகளை அடைவதற்கான பாதையில் உள்ளது. தடுப்பூசி திட்டம் மற்றும் விநியோகத்தில் சில தடங்கல்கள் தவிர்க்க முடியாதவை என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம்.
குறுகிய காலத்திற்குள், அதாவது நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்பு திட்டமிட்டதை விட குறைவான தடுப்பூசிகளைப் பெறுகிறோம் என்பது உண்மைதான் . இருப்பினும் தங்களிடம் இருக்கும் தடுப்பூசி சப்ளை நாம் நிர்ணயித்த இலக்கை அடைய உதவும் என்று நம்புகிறோம்.
வரும், ஏப்ரல் 15-ஆம் திகதிக்குள் 50 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் மற்றும் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படக்கூடிய 50 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் முதல் டோஸ் வழங்க முடியும். ஒவ்வொரு வயது வந்தோருக்கும் ஜூலை இறுதிக்குள் முதல் டோஸை வழங்குவோம்.
இதனால் தடுப்பூசி வழங்கும் பணியில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது. நாம் சரியான திசையில் செல்லும் வரை வரும் சோதனைகளை சந்திப்போம் என்று கூறியுள்ளார்.