மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவா? முதல்வரை சந்தித்த பின்னர் வைகோ விளக்கம்
முதல்வர் விஜய்யை சந்தித்த பின்னர் கூட்டணி நிலைப்பாடு குறித்து வைகோ விளக்கமளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இருந்து விலகும் மதிமுக
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகள் தவெக அரசில் இணைந்துள்ளது.
இதனையடுத்து, ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், திமுக கூட்டணியில் இருந்து விலகியதாக அறிவித்துள்ளது.
இதே போல், மதிமுக எம்எல்ஏக்கள் இருவர் உதயசூரிய சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில், இருவரும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி தவெக கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை சந்தித்த நிலையில், இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசியுள்ளார்.

வைகோ விளக்கம்
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியுள்ளேன். மீண்டும் அந்த நிறுவனம் GREEN COPPER பெயரியல் இயங்க முயற்சிக்கிறது, தமிழ்நாடு அரசு அதை அனுமதிக்க கூடாது என்பதை முதலமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
இந்த அரசு அமைந்தது முதல் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. இது மக்களின் மனதை குளிர்விக்கக்கூடிய, ஒரு ஆரோக்கியமான நிர்வாகமாகும்.

கமிஷன், கரப்பஷன் என்ற சொற்களுக்கு இடமளிக்காமல் ஜோசப் விஜய் அரசு இயங்குகிறது என்பது என்னுடைய கருத்து.
30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை 6 பகுதிகளாக தொகுத்திருக்கிறேன் வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி அதன் புத்தகமாக டெல்லியில் வெளியிட ஏற்பாடு செய்திருக்கிறேன்.
குடியரசு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட வேண்டுமென திட்டமிட்டிருக்கிறேன் முதலமைச்சர் விஜய் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கிறேன். அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளார்களா என்ற கேள்விக்கு யூகங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், மதிமுக திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெகவில் இணைய உள்ளதா என்ற கேள்விக்கு, பொதுக்குழுவில் இது குறித்து விவாதித்து முடிவெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |