வெளிநாடுகளில் நூறு பாடல்களுக்கு ஒரு தீவை வாங்கிவிடலாம், ஆனால் நான்.. மனமுடைந்து பேசிய வைரமுத்து!
வெளிநாடுகளில் நூறு பாடல்கள் எழுதினால் ஒரு தீவை வாங்கி விடலாம், இங்கு சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன் என கவிஞர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் தமிழ் திரையுலகில் இசை மற்றும் பாடல்களுக்கான காப்புரிமை தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கவிஞர்கள் வைரமுத்து, விவேகா உட்பட பிரபல பாடலாசிரியர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, திரைத்துறையில் இருப்பவர்களுக்கு காப்புரிமை குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு என கூறினார்.
மேலும் பேசிய அவர், 'கலைஞர்கள் பாவம், கலைஞர்கள் கற்பனாவாதிகள், கலைஞர்கள் சட்டமறியாதவர்கள், கலைஞர்கள் உரிமை தெரியாதவர்கள்.
மேல் நாடுகளில் 100 பாடல்கள் ஒருவர் எழுதிவிட்டால், அதில் வரும் காப்புரிமை பணத்தில் பசிபிக் கடல் ஓரத்தில் ஒரு தீவை வாங்கி விடுவார்கள். ஒருவேளை அந்த பணம் தீர்ந்துவிட்டால் மீண்டும் கரைக்கு வந்து 5 பாடல்கள் எழுதி கொடுத்துவிட்டு திரும்ப தீவுக்கு சென்று விடலாம்.
ஆனால் நான் 7,500 பாடல்கள் எழுதியிருக்கிறேன். இவர்கள் அனுப்பும் சில லட்சத்திற்காக காத்திருக்கிறேன். இது தான் எங்கள் நிலைமை' என வேதனையுடன் தெரிவித்தார்.