பிரான்சில் மகளை அடைய முயன்ற கணவனை கொலை செய்த பெண் வழக்கில் அதிரடி திருப்பம்
பிரான்சில், மகளை கட்டாயப்படுத்தி மனைவியாக்கி, பிறகு பேத்தி மீதும் கண் வைத்த நபரைக் கொன்ற பெண் வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. நேற்று, Valérie Bacot (40) என்னும் அந்த பெண், கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டார். Valérieக்கு 12 வயதாகும்போது, அவள் பருவம் அடைந்ததுமே அவளது தாயின் காதலனான Daniel Polette, Valérieயை வன்புணர்ந்துள்ளான்.
குடிகார தாய் பாதுகாக்காததால் இதே கொடுமை தொடர, 17 வயதில் தன் தந்தை ஸ்தானத்திலிருக்கவேண்டிய Poletteஆல் கர்ப்பமுற்றிருக்கிறார் Valérie. கேட்க யாருமில்லாததால், அவளை கட்டாயப்படுத்தி தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை தான் சீரழித்ததோடு, பலருக்கும் இரையாக்கி பணம் சம்பாதித்திருக்கிறான் Polette. இதே கொடுமை வருடக்கணக்காக தொடர்ந்திருக்கிறது.
ஆனால், Valérieக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க, அந்த பெண் குழந்தை பருவம் அடைந்தபோது, அவள் மீதும் கண் வைத்த Polette, அவளையும் சீரழிக்க திட்டமிட்டிருக்கிறான். ஆகவே, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்த Valérie, ஒரு நாள் Poletteஐ அவனது துப்பாக்கியாலேயே சுட்டுக்கொன்றுவிட்டார்.
இந்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. வழக்கு விசாரனையின்போது, தன்னையும், தன் குழந்தைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகவே, தான் தன்னை பல ஆண்டுகளாக துஷ்பிரயோகம் செய்து சித்திரவதை செய்த Poletteஐ கொலை செய்ததாக தெரிவித்தார் Valérie. நீதிபதி ஒருவர் Valérie குற்றவாளிதான் என தீர்ப்பளித்து அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
ஆனால், அட்வகேட் ஜெனரலான Eric Jallet, திட்டமிட்ட கொலை என்பது தற்காப்புக்காக என்னும் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதுதான், ஆனால், Valérie நீண்ட காலமாக கொடுமைப்படுத்தப்பட்டிருக்கிறார், எப்படியாவது பிழைத்துக்கொள்ளவேண்டும் என்றே அவர் விரும்பியிருக்கிறார். ஆகவே, இனி Valérie சிறைக்கு செல்லக்கூடாது என்று கூறிவிட்டார். Jallet கூறியதைக் கேட்ட Valérie நீதிமன்றத்திலேயே மயங்கிச் சரிந்தார்.
பிறகு அவருக்கு நினைவு திரும்பியபோது, நீதிபதிகள் அவரை விடுவிக்க சம்மதம் தெரிவித்தனர். ஏற்கனவே அவர் ஓராண்டு சிறையில் செலவிட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள மூன்று ஆண்டுகள் தண்டனையையும் இப்போதைக்கு அனுபவிக்கவேண்டாம் என்று நீதிபதிகள் கூறிவிட்டதால், Valérie விடுவிக்கப்பட்டார், அவர் வீடு செல்ல நீதிபதிகள் அனுமதித்துவிட்டனர்.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த Valérieயை பெண்கள் கையெடுத்துக் கும்பிட்டு வாழ்த்தியதைக் காண முடிந்தது. குடும்ப வன்முறை அதிகரித்து வரும் நிலையில், அதை Valérie மேற்கொண்டு வென்றதாக பெண்கள் கருதுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பொதுமக்கள் Valérieயை மன்னித்து, அவர் மீதான குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ளவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.