ஆடு மேய்த்தவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி: தமிழச்சியின் சாதனை பயணம்
Vanmathi Success Story: ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்ந்த சாதாரண ஓட்டுநரின் மகள் இன்று தமிழகமே போற்றும் அதிகாரியாக உயர்ந்து நிற்கிறார்.
வறுமை காரணமாக ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டே படிப்பால் உயர்ந்து இன்று உயர் அதிகாரியாகி இருக்கிறார்.
தன் சாதனை பயணத்துக்கு வறுமையை காரணம் காட்டாமல் கலெக்டராக உயர்ந்து ஜொலிக்கிறார் வான்மதி ஐஏஎஸ்.

வான்மதியின் தந்தை ஓட்டுநர், காலையில் பள்ளிக்கு செல்லும் வான்மதி மாலை நேரங்களில் ஆடு, மாடுகளை மேய்க்கச் சென்றுவிடுவார்.
கையோடு புத்தகத்தையும் எடுத்து சென்றுவிடுவார், படிப்பில் அதீத கவனம், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், இப்படியே பள்ளிக்கால நாட்கள் கடந்தோடின.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து வைக்கலாம் என குடும்பத்தினர் ஆலோசித்தனர், ஆனால் வான்மதிக்கு அவரது பெற்றோர் உறுதுணையாய் இருந்தனர்.

தனது விடாமுயற்சியில் முதுகலை பட்டம் பெற்ற வான்மதி யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாரானார். பல ஆண்டு கனவு அவருக்கு நனவாகிப்போனது, 2015ம் ஆண்டு நடந்த தேர்தவில் அகில இந்திய அளவில் 152வது இடத்தை பிடித்து ஐஏஎஸ் அதிகாரியானார்.
அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்பு அளித்த வான்மதி தற்போது மகாராஷ்டிராவின் வர்தா மாவட்ட ஆட்சியராக வலம்வந்து கொண்டிருக்கிறார்.