எங்கள் மதுபான விடுதி ஊழியர்கள் நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள்... பிரித்தானிய வாடிக்கையாளர்களை மீண்டும் கவர்ந்திழுக்க பிரான்ஸ் திட்டம்
பிரெக்சிட்டுக்கு முன் பிரித்தானிய மதுபான விரும்பிகள் பிரான்சுக்கு சென்று மதுபானம் அருந்தும் வழக்கம் இருந்தது.
ஆனால், பிரெக்சிட் மாற்றக்காலம் 2021 ஜனவரி 1ஆம் திகதியுடம் முடிவடைந்ததால், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் கொண்டு செல்லப்படும் மதுபானங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அத்துடன், கொரோனா கட்டுப்பாடுகளும் சேர்ந்துகொள்ள, பிரான்ஸ் மதுபானங்களை ருசி பார்க்க விரும்பும் பிரித்தானியர்களின் ஆசையில் மண் விழுந்தது.
ஆனால், இப்போது இரு நாடுகளுக்குமிடையிலான போக்குவரத்து மீண்டும் துவங்கும் நிலையில், அக்டோபர் 4ஆம் திகதி மீண்டும் பிரித்தானியா கட்டுப்பாடுகளை நெகிழ்த்த இருப்பதால், மீண்டும் பிரித்தானியர்கள் பிரான்ஸ் நாட்டு மதுபானங்களை சுவைக்க ஒரு வழி திறக்க இருக்கிறது.
இந்நிலையில், மீண்டும் பிரித்தானிய வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக Calais மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள், சில சலுகைகளை அறிவித்துள்ளதோடு, சில நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளார்கள்.
அதன்படி, மதுபானம் முதலான பொருட்களை வாங்கும் பிரித்தானியர்கள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்கான மதிப்புக் கூட்டு வரியை கிளைம் செய்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை Calais மதுபான விடுதிகளின் உரிமையாளர்கள் செய்துள்ளார்கள்.
அத்துடன், பிரித்தானியர்களுக்கு உதவும் வகையில், மதுபான விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஆங்கிலம் பேசக்கூடியவர்களாக நியமித்துள்ளதாகவும், பிரித்தானியர்களின் சுவை அறிந்த அந்த ஊழியர்கள், அவர்களுக்கு மதுபானம், உணவு முதலானவற்றை பரிந்துரைக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார் மதுபான விடுதி ஒன்றின் உரிமையாளர்.