வவுனியாவில் பாடசாலைகளில் 50 வீதமான மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி - அதிபர்களுக்கு அவசர அறிவித்தல்
வவுனியா மாவட்டம் உட்பட நாடு முழுவதும் கோவிட்-19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற இந்நிலையில் நாடு முழுவதும் பல நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
மூன்று நாட்கள் விடுமுறையின் பின்னர் பாடசாலைகள் நாளையதினம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்குட்பட்ட பாடசாலை அதிபர்களுக்கு வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதகிருஷ்ணன் அவசர அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். பாடசாலையில் கைகழுவும் ஏற்பாடு முழுமையாக செயற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருத்தம், பராமரிப்பு, மேற்பார்வை, வழிப்படுத்தல் என்பவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் , பாடசாலையினுள் முழுமையாக முகக்கவசம் பயன்படுத்தப்படுவது உறுதிப்படுத்த வேண்டும். இது ஆசிரியர்கள் ,மாணவர்கள், சிற்றூழியர்கள் என சகலருக்கும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
வகுப்பறைகளில் 15 தொடக்கம் 20 மாணவர் வரையில் சமூக இடைவெளி பேணக்கூடிய வகையிலான வகுப்புக்களே நடத்தப்பட வேண்டும். இதற்கு ஏற்றாற்போல் பிரிவுகளை பிரித்து 50 வீத மாணவர் உள்ளடங்கிய பாடசாலை நாளாக திட்டமிட செயற்படுத்த அதிபர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது.
வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தவிர்ந்த எவ்விதமான செயற்பாடுகளும் மேற்கொள்ள முடியாது என அரசு அறிவித்துள்ளது.
எனவே இதனை கருத்தில் கொண்டு செயற்படவும். மேற்படி விடயங்கள் தொடர்பாக அர்பணிப்பான சேவையினை ஆசிரியர்கள் வழங்க கூடிய வகையில் கலந்துரையாடி கோவிட் சவாலை முறியடித்து மாணவர்களுக்கான கல்வியை வழங்க வேண்டும் போன்ற அறிவித்தல்களை விடுத்துள்ளார்.