ஏராளம் காய்கறிகளை உண்ணுவதால் இதயநோயிலிருந்து தப்ப முடியுமா?: ஆய்வில் தெரியவந்த உண்மை
ஏராளம் காய்கறிகளை உண்டால் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம் என்றுதான் இதுவரை எல்லோரும் கூறிவந்தார்கள்.
ஆனால், அப்படி காய்கறிகளை நிறைய உண்டாலும் இதய நோயிலிருந்து தப்ப முடியாது என பிரித்தானிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட பெரிய ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலை ஆய்வாளர்கள் 12 ஆண்டுகளாக 400,000 பிரித்தானியர்கள் குறித்த தரவுகளை கவனித்துவந்துள்ளார்கள். அந்த காலகட்டத்தில், 18,000 பேருக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் முதலான பல பெரிய இதயப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்கள், நாளொன்றிற்கு எவ்வளவு காய்கறிகள் உணவில் சேர்த்துக்கொண்டார்கள் என்பது குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலும் பச்சைக் காய்கறிகள் சாப்பிட்ட 15 சதவிகிதத்தினருக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது.
அதே நேரத்தில் காய்கறிகளை சமைத்து சாப்பிட்டவர்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை. பச்சைக் காய்கறிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையும், செல்வந்தர்களாக இருத்தல், வாழ்க்கைமுறை ஆகிய விடயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும்போது காணாமலே போய்விட்டது.
ஆக, பிரக்கோலி, கேரட் மற்றும் பீன்ஸ் மற்றும் பச்சைப்பட்டாணி போன்ற காய்கறிகளை ஏராளம் உண்ணுவது, இதய நோய்கள் உருவாகுவதிலிருந்து பாதுகாப்பை ஏற்படுத்தவில்லை என்ற முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.
காய்கறிகளை அதிகம் சாப்பிடுபவர்கள் வாழ்வின் பிற அம்சங்களிலும் ஆரோக்கியமாக இருக்க முயல்வதாலேயே அவர்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதேயொழிய, அது வெறும் காய்கறிகளை உண்ணுவதால் மட்டுமல்ல என்பது அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
அதாவது ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் காய்கறிகளை உண்ணுபவர்கள், மற்றபடியும் ஆரோக்கியமாக இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே அவர்களது ஆரோக்கியத்திற்கு காரணமேயொழிய, வெறுமனே காய்கறிகளை உண்ணுவது மட்டுமல்ல.
ஆய்வை மேற்கொண்டவர்களில் ஒருவரான Dr Ben Lacey கூறும்போது, சமநிலையான உணவை உண்ணுவதும், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பதும், உடல் நலனை சீராக வைத்துக்கொள்வதற்கும், சிலவகை புற்றுநோய்கள் முதலான பெரிய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகளில் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன என்கிறார்.
அதற்காக, பிரித்தானியர்கள், காய்கறிகள் உண்ணுவதையே தவிர்த்துவிடவேண்டாம் என்கிறார்கள் ஆய்வை மேற்கொண்ட மற்ற ஆய்வாளர்கள்!