300 கிமீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்.., மகா கும்பமேளா மண்டலத்தில் வாகனங்களுக்கு தடை
300 கிலோமீற்றர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மகா கும்பமேளா மண்டலத்தில் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு தடை
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13-ம் திகதி மகா கும்பமேளா தொடங்கியது. இந்த நிகழ்வுகளில் முக்கியமான ஒன்றாக இன்று மாகி பவுர்ணமி தினம் பார்க்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு இன்று (பிப்ரவரி 11) மாலை 5 மணி முதல் நாளை (பிப்.12) வரை கும்பமேளா மண்டலத்தில் வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை தருகின்றனர். இதனால் நேற்று பிரயாக்ராஜுக்குச் செல்லும் சாலைகளில் சுமார் 300 கிலோமீற்றர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, பக்தர்கள் வரும் வழியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில், மகா கும்பமேளா மண்டலத்தில் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தர பிரதேச டிஜிபி பிரஷாந்த் குமார் கூறுகையில், "பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு காரணம். முறையாக திட்டமிட்டே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |