அதிரடியான பவுண்டரியுடன் தனது சர்வதேச கிரிக்கெட்டை தொடங்கிய தமிழன் வெங்கடேஷ்! ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக உருவாகிறாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு மாற்றாக தமிழகத்தை சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் உருவாக்கப்படுகிறாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டருக்கு ஹார்திக் பாண்டியாவை மட்டும் இந்திய அணி சார்ந்து இருப்பதாக விமர்சனங்கள் இருந்து வருகிறது. டி20 உலகக் கோப்பை தொடரில் வெங்கடேஷ் ஐயரை சேர்க்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில், நியூசிலாந்து டி20 தொடரில் வெங்கடேஷ் ஐயர் சேர்க்கப்பட்டார். தொடக்க ஆட்டக்காரராக அவர் எப்போதும் களமிறங்குவார். ஆனால் நேற்றைய போட்டியில், பாண்டியாவைப் போல பேட்டிங் ஆல்ரவுண்டராக இருக்கும் வெங்கடேஷ் ஐயரை பின்வரிசையில் களமிறக்கப்பட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த வெங்கடேஷ் அடுத்த பந்தில் அவுட்டானார்.
இந்த நிலையில் பலரும் எதிர்பார்த்ததை போல பாண்டியாவுக்கு மாற்று வீரராக அவரைத் தயாரிக்கிறதா இந்திய அணி என்கிற கேள்வி எழுந்துள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் பாண்டியா பேட்டிங் ஆல்ரவுண்டராக சேர்க்கப்பட்ட போதிலும் முதல் பகுதி ஆட்டங்களில் அவர் பந்துவீசவில்லை.
எனவே, 6-வது பந்துவீச்சாளர் இல்லாமல் இந்திய அணி திணறி வந்தது. இதுபோன்ற சூழல்களைத் தவிர்க்கவே வெங்கடேஷ் ஐயரை இந்திய அணி பட்டை தீட்டுவதாக சொல்லப்படுகிறது.