வெங்கடேஷ் அய்யரை கடுமையாக விமர்சித்த கவுதம் காம்பீர் - என்ன சொன்னார் தெரியுமா?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெங்கடேஷ் அய்யர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போனது குறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்தார். ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் 24 ரன்கள் மட்டுமே அடித்ததால் 3வது போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். 2வது போட்டியில் பந்து வீச வாய்ப்பு கிடைத்த போதிலும், விக்கெட் வீழ்த்தவில்லை.
இந்த நிலையில் வெங்கடேஷ் அய்யர் ஒருநாள் போட்டிக்கு சரிவரமாட்டார் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், வெங்கடேஷ் அய்யர் டி20க்களில் மட்டுமே தேர்வு செய்யப்பட பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் அவருக்கு ஒரு நாள் போட்டிக்கான முதிர்ச்சி இன்னும் வரவில்லை. 7-8 ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே அவரைப் பார்த்து சர்வதேச அளவில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் ஐபிஎல் போட்டிகளை ஒரு அளவுகோலாக வைக்கிறீர்கள் என்றால் அவரை டி20 கிரிக்கெட்டில் விளையாட செய்யுங்கள். ஒருநாள் போட்டி என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்று என காம்பீர் கூறியுள்ளார்.
மேலும் வெங்கடேஷ் அய்யர் ஒருநாள் கிரிக்கெட் போ்டடியில் விளையாட கருதினால் ஐபிஎல் அணி அவரை மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்க வேண்டும். ஆனால் ஐபிஎல் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கினால் அவர் டி20 கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரராக மட்டுமே களம் இறங்க வேண்டும் என்றும் காம்பீர் தெரிவித்துள்ளார்.