இந்திய கிரிக்கெட் அணிக்கு சூப்பரான ஆல்ரவுண்டரை கண்டுபிடிச்சுட்டாங்க! இளம் தமிழனை பாராட்டி தள்ளிய பிரபல ஜாம்பவான்
கொல்கத்தா அணியில் ஆடி வரும் வெங்கடேஷ் ஐயர் தொடக்க வீரராக இந்த ஐ.பி.எல்.லில் கலக்கி வரும் நிலையில் அவரை ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி சரியான ஆல்ரவுண்டர் இல்லாமல் தவித்து வருகிறது. ஸ்பின்- பேட்டிங்கில் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலிக்கின்றனர்.
ஆனால் வேகப்பந்து வீச்சு-பேட்டிங் ஆல்ரவுண்டர் இந்தியாவுக்கு சிறப்பாக அமையவில்லை. இந்த நிலையில் தான் இந்திய அணிக்கு ஆல் ரவுண்டராக நான் இருக்கிறேன் என நிரூபித்து வருகிறார் வெங்கடேஷ் ஐயர்.
கொல்கத்தா அணியில் ஆடி வரும் வெங்கடேஷ் தொடக்க வீரராக இந்த ஐ.பி.எல்.லில் கலக்கி வருகிறார். இதுவரை 4 போட்டிகளில் ஆடியுள்ள வெங்கடேஷ் ஒரு அரை சதத்துடன் 126 ரன்கள் குவித்துள்ளார். இது தவிர மிதவேக பந்துவீச்சாளரான இவர் 2 விக்கெட்டும் எடுத்துள்ளார். சிறப்பாக பவுலிங் செய்து ஓவருக்கு 6.80 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வெங்கடேஷ் ஐயர் சிறந்த ஆல்ரவுண்டர் என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ' வெங்கடேஷ் ஐயர். இந்தியா தேடும் ஆல்-ரவுண்டராக இருக்கக்கூடிய ஒரு வீரரை கொல்கத்தா கண்டுபிடித்துள்ளது.
அவரது பந்துவீச்சில் வேகம் இல்லை. ஆனால் அவர் யார்க்கரைச் சரியாக போடுகிறார். பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுகின்றனர். ஒரு பேட்ஸ்மேனாக, அவர் தரமாக விளையாடுகிறார். ஷார்ட் பிட்ச் பந்துகளை சிறப்பாக அடிக்கிறார் என கூறியுள்ளார்.