வாடகை கொடுக்கவில்லை என்று கூறி வழக்குத் தொடர்ந்த வீட்டு உரிமையாளர்: தலைகீழாக மாறிய தீர்ப்பு...
தனது வீட்டில் குடியிருப்பவர் வாடகை கொடுக்கவில்லை என்று கூறி வழக்குத் தொடர்ந்தார் வீட்டு உரிமையாளர்.
ஆனால், நீதிமன்றம் சென்றபோது வழக்கு தலைகீழாக மாறிவிட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஒரு நபர் வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது 11 சதுர மீற்றர் அளவுள்ள ஒரு வீடு வாடகைக்கு இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கவே, அந்த வீட்டுக்கு குடிபோயிருக்கிறார் அவர்.
François (66) என்னும் அந்த நபரிடம் 400 யூரோக்கள் வாடகை என வீட்டு உரிமையாளர் கூற, அதற்கு சம்மதித்திருக்கிறார் அவர். அந்த வீட்டில் மரச்சாமான்கள் முதலான அத்தியாவசிய பொருட்கள் இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில், உண்மையில் அந்த வீட்டில் எந்த பொருட்களும் இல்லை.
ஆனாலும், அந்த வீட்டில் ஏழு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார் François. 2019ஆம் ஆண்டு அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவரால் வாடகை கொடுக்கமுடியாமல் போயிருக்கிறது.
உடனே அவரை நீதிமன்றத்துக்கு இழுத்திருக்கிறார் அந்த வீட்டின் உரிமையாளர்.
ஆனால், நீதிமன்றத்தில் விடயம் தலைகீழாக மாறிவிட்டது!
ஆம், 11 சதுர மீற்றர் என கூறப்பட்ட அந்த வீடு உண்மையில் வெறும் 5 சதுர மீற்றர் மட்டுமே இருப்பது நீதிமன்றத்துக்கு தெரியவந்துள்ளது.
பிரான்ஸ் சட்டப்படி, வாடகைக்கு விடும் வீடு, குறைந்தபட்சம் 9 சதுர மீற்றர்களாவது இருக்கவேண்டும்.
ஆகவே, Françoisஐ ஏமாற்றி வீடு வாடகைக்கு விட்ட அந்த வீட்டின் உரிமையாளர், Françoisக்கு 19,463 யூரோக்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், அவர் அலைக்கழிக்கப்பட்டதற்காக 2,000 யூரோக்கள் அபராதம் வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Françoisக்கு நீதி கிடைத்துவிட்டது. ஆனால், பாரீஸைப் பொருத்தவரை 58,000 வீடுகள் சட்டவிரோதமாக வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ ஆவணங்கள் தெரிவிக்கின்றன.