இந்தியாவின் நிலைமை அச்சமூட்டுவதாக இருக்கிறது: அமெரிக்க அதிகாரி கவலை
இந்தியாவில் தற்போதைய கொரோனா பரவல் சூழல் மிகுந்த கவலைக்கிடமாக இருக்கிறது, இன்னும் பாதிப்பின் அளவு உச்சத்தை அடையவில்லை என்று அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரையில்லாத வகையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் பாதிக்கப்பட்டனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, மருந்துகள் ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு கரம் நீட்டி உதவிகளை வழங்கி வருகின்றன.
இதனிடையே, அமெரிக்க அரசின் சுகாதாரப்பிரிவின் உலகளாவிய கொரோனா தடுப்பு மற்றும் சுகாதாரப் பிரிவு ஒருங்கிணைப்பு அதிகாரி கெயில் இ ஸ்மித் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்தியாவில் நிலவும் கொரோனா வைரஸ் பரவல் சூழல், உண்மையிலேயே மிகவும் கவலை கொள்ளும் பிரச்சினையாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் மக்களின் அளவு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எங்களைப் பொருத்தவரை இன்னும் உச்சத்துக்கு வரவில்லை.
மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாவது, நோயால் பாதிக்கப்படுவது, கவனிப்பு ஆகியவற்றுக்கு இடையே பெரிய இடைவெளி இருப்பதால்தான் கொரோனா பரவல் வேகம் அதிகரிக்கிறது.
உடனடியாக குறிப்பிட்ட சில விடயங்களுக்கு அவசரமான, அதிகமான முக்கியத்துவம் தேவைப்படுகிறது. அதனால்தான் நாங்கள் ஆக்சிஜன் சப்ளை, தடுப்பு மருந்துகள், தடுப்பூசி சப்ளை, உற்பத்தி, பரிசோதனைகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்டவற்றில் அதிகமான கவனம் செலுத்தினோம்.
இந்தியாவுக்கு என்ன மாதிரியான உதவிகள், பொருட்கள் தேவைப்படுகிறது என்ற கோரிக்கை வந்தவுடன் அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற்று விரைவாகச் செயல்படுவோம் என்றார்.