பிரபல நடிகர் தர்மேந்திரா காலமானார் - சோகத்தில் ரசிகர்கள்
பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா தனது 89 வயதில் காலமானார்.
தர்மேந்திரா
ரசிகர்களால் ஹீ மேன் என அன்புடன் அழைக்கப்பட்டவர் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா(dharmendra).

பஞ்சாபின் லூதியானாவில், 1935 ஆம் ஆண்டில் பிறந்த தர்மேந்திரா, 1960 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வரும் இவர், இதுவரை 300க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் ஒன்று 1975 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படப் பாத்திரமாகும்.

தனது 19 வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்த இவர், 1980 ஆம் ஆண்டில் பிரபல நடிகை ஹேமமாலினியை 2வது திருமணம் செய்தார்.
தர்மேந்திராவிற்கு சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், அஹானா தியோல், அஜீதா மற்றும் விஜேதா என 6 பிள்ளைகள் உள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர், உடல்நலக்குறைவு காரணமாக அவர் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியான நிலையில், தர்மேந்திரா நலமுடன் உள்ளதாக அவரது குடும்பத்தினர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து,உடல்நிலை தேறியதாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட தர்மேந்திரா அவரது இல்லத்தில் வைத்து காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட் திரையுலகை சேர்ந்தவர்கள் தர்மேந்திராவின் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தர்மேந்திராவின் மறைவு, திரையுலகை சேர்ந்தவர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் தர்மேந்திராவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியத் திரைப்படத்துறைக்கு இவர் செய்த பங்களிப்புக்காக 1997 ஆம் ஆண்டில் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

2012 ஆம் ஆண்டில், இந்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது.
2004 நாடாளுமன்ற தேர்தலில், ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |