பல ஆண்டுகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட இளம்பெண் எடுத்த துணிச்சலான முடிவு
பல ஆண்டுகளாக காதலனால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கற்றுக்கொண்ட தற்காப்புக்கலை, தற்போது அவரை தைரியத்துடன் வாழ வைத்துள்ளது.
இனி என் மீது யாரும் கைவைக்க முடியாது என்று இப்போது கூறும் Kheira Saadi (32)இன் கதை, ஆங்கிலத் திரைப்படங்களில் வரும் ஒரு கதை போன்றது.
சிறுவயதில் Kheira தந்தையின் பொறுப்பில் விடப்பட்ட நிலையில், தந்தை ஒரு நாள் போதைப்பொருள் வழக்கில் சிறைக்குச் செல்ல, குழந்தைகள் காப்பகம் ஒன்றில் விடப்பட்டிருக்கிறார்.
காப்பகமோ, காப்பதற்கு பதிலாக Kheiraவை உடல் ரீதியிலும், பாலியல் ரீதியிலும் துஷ்பிரயோகம் செய்துள்ளது. 14 வயதானபோது, யாராவது ஆதரிக்கமாட்டார்களா என வெளியே வர, ஆதரித்த கூட்டம் தவறான கூட்டம்.
தவறான இடம், தவறான நண்பர்கள்... ஒரு கட்டத்தில் காதல் வர, காதலனாக வந்தவனும் Kheiraவை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியிருக்கிறான். அதற்குள் குழந்தை ஒன்றும் பிறந்துவிட, 2012ஆம் ஆண்டு காதலனிடமிருந்து தப்பி, பிரான்சிலிருந்து வெளியேறி பிரஸ்ஸல்சுக்கு சென்றிருக்கிறார் Kheira. அங்கேதான் பாக்ஸிங் கற்றுக்கொண்டிருகிறார் அவர்.
ஆனாலும் தன்னை தன் காதலன் கண்காணித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு உணர்வு அச்சுறுத்திக்கொண்டே இருக்க, போதுமான பணம் சம்பாதித்து, அமெரிக்காவுக்கு டிக்கெட் வாங்கி, மகளுடன் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார் Kheira.
அங்கே ஒரு பக்கம் கிக் பாக்ஸிங் பயிற்சியுடன், மறு பக்கம் நர்ஸிங் கற்றுக்கொள்ளும் Kheira, போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ஒரு பக்கம் நர்ஸிங் கற்றுக்கொண்டாலும், தான் ஒரு கிக் பாக்ஸராக ஆகத்தான் விரும்புகிறே என்று கூறும் Kheira, இப்போதுதான் நான் தைரியமாக உணர்கிறேன். இனி என்னை யாரும் அடிக்க முடியாது, யாராவது என்மேலே கைவைத்தால் பின்னி எடுத்துவிடுவேன் என்கிறார்.