மிரட்டலுக்கு பணிந்த கனடா, மெக்ஸிகோ... வரி விதிப்பு தொடர்பில் ட்ரம்புக்கு கிடைத்த வெற்றி
கடைசி நொடி பேச்சுவார்த்தையின் முடிவில் கனடாவும் மெக்ஸிகோவும் அளித்த வாக்குறுதியை அடுத்து வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் கால அவகாசம் அளித்துள்ளார்.
30 நாட்கள் கால அவகாசம்
கனடா மற்றும் மெக்ஸிகோ மீதான வரி விதிப்புக்கு 30 நாட்கள் கால அவகாசம் அளித்துள்ளார் டொனால்டு ட்ரம்ப். இதன் ஒருபகுதியாக அமெரிக்காவின் அண்டை நாடுகளான கனடாவும் மெக்ஸிகோவும் 1.3 பில்லியன் டொலர் திட்டமொன்றை வகுக்க உள்ளதுடன், 10,000 வீரர்களை எல்லையில் ரோந்து பணிகளுக்கு உட்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ள 25 சதவிகித வரி விதிப்பு அமுலுக்கு வரும் சில மணி நேரங்களுக்கு முன்னர், இரு நாடுகளும் அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்பு விவகாரத்தால் திங்களன்று பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. அதேவேளை மெக்ஸிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ட்ரம்புடன் கடைசி நிமிட தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டனர்.
ட்ரம்பின் முடிவால் ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலையும் முடிவுக்குக் கொண்டுவரவும், சேதம் விளைவிக்கும் உலக வர்த்தகப் போரை நிறுத்தவும் இந்த இருவரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மெக்ஸிகோவும் கனடாவும் தங்கள் அமெரிக்க எல்லைகளில் 10,000 வீரர்களை நிறுத்துவதாக உறுதியளித்ததை அடுத்து, ஒரு மாதத்திற்கு தனது வரி விதிப்பு திட்டங்களை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
மேலும், சட்டவிரோத குடியேற்றம் மற்றும் நாட்டிற்குள் நுழையும் கொடிய போதைப்பொருட்களின் வருகையிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாப்பதே இதன் நோக்கமென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
10,000 வீரர்களைக் கொண்டு
மட்டுமின்றி, தமது அதிரடி நடவடிக்கைகளுக்கு உடனடி பலன் கிடைத்துள்ளதாக சமூக ஊடக பக்கத்தில் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார். அத்துடன் கனடா சுமார் 1.3 பில்லியன் டொலர் எல்லை திட்டத்தை செயல்படுத்த இருப்பதையும்,
புதிய ஹெலிகொப்டர்கள், தொழில்நுட்பம் மற்றும் வீரர்களைக் கொண்டு எல்லையை வலுப்படுத்த இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த 30 நாட்கள் மிக முக்கியம் என குறிப்பிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப், வரி விதிப்பா அல்லது பொருளாதார ஒப்பந்தங்களா என்பதை கனடா முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் மெக்ஸிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமும் புதிய ஒப்பந்தம் தொடர்பில் உறுதி செய்துள்ளனர். மெக்ஸிகோவின் தேசிய காவல்படையின் 10,000 வீரர்களைக் கொண்டு வடக்கு எல்லையை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கிளாடியா ஷீன்பாம் உறுதி அளித்துள்ளார்.
முன்னதாக ட்ரம்பின் வரி விதிப்பிற்குப் பதிலடியாக கனடா 100 பில்லியன் டொலருக்கும் அதிகமான அமெரிக்கப் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்தது. அதே நேரத்தில் அமெரிக்கா மீது உலக வர்த்தக அமைப்பில் வழக்குத் தொடரப் போவதாக சீனா மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |