2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை பெறுவோம்- முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடந்து வருகின்றன.
அந்தவகையில், கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிப்பதற்கு சட்டசபையில் மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.
மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்ததை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரையாற்றினார்.
அவர் கூறியதாவது..,
மக்களவை தேர்தலில் 40க்கு 40 வெற்றி என்ற பெருமிதத்துடன் சட்டசபைக்கு வந்துள்ளோம்.
பொய் பிரச்சாரங்களை முறியடித்து செய்கூலி சேதாரம் இல்லாத வெற்றியை மக்கள் திமுக கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள்.
2026 சட்டசபை தேர்தலிலும் மகத்தான வெற்றியை நாங்கள் பெறுவோம். திமுக அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பேரில் இதனை துணிச்சலுடன் சொல்கிறேன்.
மக்களவை தேர்தல் முடிவுகளின்படி 221 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது.
மக்கள் மனதில் யார் உள்ளார்கள், மக்கள் யாரை புறக்கணித்தார்கள் என்பதை இந்த வெற்றி உணர்த்தும்.
தேர்தல் தோல்வியின் தாக்கத்தால் கள்ளச்சாராய விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கையில் எடுத்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 24 மணி நேரத்தில் அரசு துரித நடவடிக்கை எடுத்தது.
சாத்தான்குளம் சம்பவத்தை அப்போதைய அதிமுக அரசு மறைக்க நினைத்தது. அதனால் திமுக சிபிஐ விசாரணை கேட்டது.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் உடனுக்குடன் எடுக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி சம்பவம் போல் இனி நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. தான் பொறுப்பு என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 8 செல்போன், 4 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 8,000 பக்க அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதனை இன்டர்போல் விசாரிக்க வேண்டும்" என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |