பிரித்தானிய பத்திரிகையாளர்கள் மீது ரஷ்ய இராணுவம் சரமாரி துப்பாக்கிச்சூடு! வெளியான பரபரப்பு வீடியோ
உக்ரைனில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட ஸ்கை நியூஸ் குழுவினர் மீது ரஷ்ய இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது.
மார்ச் 28-ஆம் திகதி திங்கட்கிழமையன்று உக்ரைன் தலைநகர் கீவில் இந்த சம்பவம் நடந்தது.
பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்கை நியூஸின் தலைமை நிருபர் ஸ்டூவர்ட் ராம்சே தனது குழுவினரை அழைத்துக்கொண்டு கீவ் நோக்கி சென்றபோது, திடீரென அவர்களது காரின் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் கவச உடைகளை அணிந்திருந்தனர். இருப்பினும் இந்த சம்பத்தில் ஸ்டூவர்ட் ராம்சேவுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.
கேமரா ஆபரேட்டர் ரிச்சி மோக்லரும் அவரது உடல் கவசத்தில் இரண்டு ரவுண்டுகளால் தாக்கப்பட்டார், அதற்குள் குழு தப்பித்து மறைந்துவிட்டது. பின்னர் அவர்களை உக்ரைன் பொலிஸார் மீட்டனர்.
மேலும் Dominque van Heerden மற்றும் Martin Vowles மற்றும் உள்ளூர் தயாரிப்பாளர் Andrii Lytvynenko உட்பட முழு குழுவினரும் இப்போது பாதுகாப்பாக உள்ளனர்.
ராம்சே, அண்மைய நாட்களில் கடும் சண்டையைக் கண்டுள்ள தலைநகர் கீவின் புறநகர்ப் பகுதியான புச்சாவுக்குச் செல்லும் சாலையில் இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறினார்.
ரஷ்ய உளவுப் படையால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது