ரகசிய திருமணம் செய்த இளம்பெண்: இறந்ததாக அறிவித்து..உருவ பொம்மைக்கு இறுதி சடங்கு நடத்திய குடும்பம்
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் காதலரை திருமணம் செய்த பெண்ணுக்கு, உருவ பொம்மை வைத்து இறுதிச்சடங்கு நடத்திய சம்பவம் அரங்கேறியது.
காதலருடன் ரகசிய திருமணம்
மத்திய பிரதேசத்தின் விதிஷாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் கவிதா. இவர் சமீபத்தில் காணாமல் போனதால் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள பகுதிகளில் தேடினர்.
அதன் பின்னர்தான் கவிதா காதலருடன் ரகசிய திருமணம் செய்தது தெரிய வந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தங்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
மேலும், அவருக்கு அடையாளப்பூர்வமாக ஈமச்சடங்குகளை செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி, மாவினால் செய்யப்பட்ட கவிதாவின் உருவ பொம்மையை பாடையில் வைத்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
உருவ பொம்மைக்குத் தீ
மயானத்தை அடைந்த பிறகு, குடும்பத்தினர் சிதையை தயார் செய்தனர். அனைத்து சடங்குகளும் பாரம்பரிய முறைப்படி செய்யப்பட, இறுதிச்சடங்கின் ஒரு பகுதியாக, உருவ பொம்மைக்குத் தீ வைக்கப்பட்டது.
இதுகுறித்து கண்ணீருடன் பேசிய கவிதாவின் தந்தை ராம்பாபு குஷ்வாஹா, தனது மகளின் முடிவால் குடும்பம் முற்றிலும் உடைந்துவிட்டது என்றும், இது தனது வாழ்வின் மிகவும் வேதனையான தருணம் என்றும் கூறினார்.
உருவ பொம்மையை இறுதி ஊர்வலமாக கொண்டுசென்று தீ மூட்டிய காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |