கனேடியச் சிறுமியின் இரங்கல் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் கூடிய மக்கள்
கனேடியச் சிறுமி ஒருத்தி அமெரிக்காவில் கடத்தப்பட்டதாக அவளது தந்தை கூறிய நிலையில், அவள் நீர்நிலை ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள்.
அந்தச் சிறுமியின் இரங்கல் நிகழ்ச்சிக்காக அமெரிக்காவில் ஏராளமானோர் கூடினார்கள்.
கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கனேடியச் சிறுமி
கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள Ticonderoga என்னுமிடத்தில் மெலினா (Melina Frattolin) என்னும் ஒன்பது வயது கனேடிய சிறுமி காணாமல் போனாள்.
தானும் தன் மகளும் காரில் பயணித்துக்கொண்டிருக்கும்போது, தான் சிறுநீர் கழிக்கச் சென்று திரும்பியபோது தன் மகளைக் காணவில்லை என்று கூறியிருந்தார் மெலினாவின் தந்தையான லூசியானோ (Luciano Frattolin, 45).
பின்னர், அடையாளம் தெரியாத சிலர் தன் மகளை வெள்ளை நிற வேன் ஒன்றில் கடத்திச் சென்றதாக அவர் மாற்றி மாற்றி பேச, பொலிசாரின் சந்தேகம் லூசியானோ மீது திரும்பியது. அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், மெலினாவின் முதல் கட்ட உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது.
அவள் தண்ணீரில் அமிழ்த்திக் கொல்லப்பட்டதாகவும், அது ஒரு கொலை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. என்றாலும், அவற்றை உறுதி செய்ய மேலதிக ஆய்வகப் பரிசோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.
அமெரிக்காவில் கூடிய மக்கள்
இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க்கில், சுமார் 4,700 பேர் வாழும் Ticonderogaவிலுள்ள பூங்கா ஒன்றில், மெலினாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, அந்தப் பகுதி மக்கள் ஏராளமானோர் செவ்வாயன்று கூடினார்கள்.
இரங்கல் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்த பிரிட்ஜெட் (Bridgette Cruz) என்னும் பெண், இங்குதான் அவளது உயிர் பிரிந்தது, அப்படியானால் இதுதான் அவளது ஆன்மா இளைப்பாறும் இடம் என்கிறார்.
ஒரு குழந்தையின் மரணம் இப்படி இருக்கக்கூடாது என கண்ணீர் மல்கக் கூறும் அவர், மெலினா இனி எங்களில் ஒருத்தி என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |