ஒரே போட்டியில் 6 கேட்ச் - ஜான்டி ரோட்ஸின் உலக சாதனையை முறியடித்த இந்திய வீரர்
விக்னேஷ் புதூர், 6 கேட்ச்களை பிடித்து ஜான்டி ரோட்ஸின் உலக சாதனையை முறியடித்துள்ளார்.
விஜய் ஹசாரே கோப்பை
இந்தியாவின் லிஸ்ட் ஏ கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை(Vijay Hazare Trophy), டிசம்பர் 24 ஆம் திகதி தொடங்கி, ஜனவரி 18 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் கேரளா மற்றும் திரிபுரா அணிகள் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற திரிபுரா அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய கேரள அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து, 348 ஓட்டங்கள் குவித்தது.
348 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய திரிபுரா அணி, 36.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 203 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம், கேரள அணி 145 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
விக்னேஷ் புதூர் உலக சாதனை
கேரள அணியின் பந்துவீச்சாளரான விக்னேஷ் புதூர்(vignesh puthur), இந்த போட்டியில் பீல்டராக 6 கேட்ச்களை பிடித்துள்ளார். இதன் மூலம், ஒரு போட்டியில் பீல்டராக அதிக கேட்ச்கள் பிடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக 1993 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், தென் ஆப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ்(jonty rhodes), ஒரு போட்டியில் 5 கேட்ச்கள் பிடித்து இந்த சாதனையை படைத்திருந்தார்.

கடந்த மே மாதம், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக், 5 கேட்ச்கள் பிடித்து இந்த சாதனையை சமன் செய்தார்.
தற்போது, விக்னேஷ் புதூர் இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய விக்னேஷ் புதூர், தனது அறிமுக போட்டியிலே, ருதுராஜ் கெய்க்வாட் , சிவம் துபே, தீபக் ஹூடா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் பெற்றார்.
2026 ஐபிஎல் தொடருக்காக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 30 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |