திருமணம் முடிந்த மறுநாளே வந்த சோதனை! மன்னிப்பு கடிதம் எழுதிய விக்னேஷ் சிவன்
திருமணம் முடிந்த மறுநாளே வந்த சோதனை காரணமாக மன்னிப்பு கோரியுள்ளார் விக்னேஷ் சிவன்.
திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து மணம் முடித்துள்ள நடிகை நயன்தாரா, தனது கணவருடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்திப் பெற்ற ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்தார்.
ஏழுமலையான் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்ற நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி பின்னர் மாடவீதிகளில் நடந்து சென்றனர். அப்போது, கோவில் விதிகளை மீறி காலணி அணிந்த படியே மாடவீதிகளில் இருவரும் நடந்து சென்றனர்.
அப்போது, திருமணத்துக்கு பிந்தைய வெட்டிங் சூட் எனப்படும் படப்பிடிப்பையும் நடத்தினார். இதற்கு உரிய அனுமதி பெறவில்லை என்றும், விதிகளை மீறி காலணியுடன் நடந்து சென்றது குறித்தும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து, சட்ட நிபுணர்களின் ஆலோசனை படி, தம்பதி மீது நடவடிக்கை எடுக்கப்படுமென திருப்பதி திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவன், திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளர்.
அறியாமல் தவறு செய்துவிட்டதாக அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டு, மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், திருமணம் நடந்தபின் வீட்டுக்கு கூட செல்லாமல் நேரடியாக திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானின் கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொண்டோம்.
அதன்பின் கோவிலில் இருந்து வெளியே வந்த எங்களை நிறைய பேர் சூழ்ந்து கொண்டனர். எனவே அங்கிருந்து வெளியேறி சற்று நேரம் கழித்து மீண்டும் ஏழுமலையான் கோவில் முன் வந்தோம். எங்களைப் பார்த்தால் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்பதால் விரைவாக போட்டோசூட் நடத்தி முடித்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம்.
இதனால் ஏற்பட்ட பரபரப்பில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள பகுதியில் காலணியுடன் நாங்கள் நடமாடி கொண்டிருப்பதை கவனிக்க தவறிவிட்டோம். இந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.