விஜய் கைது செய்யப்படுவாரா? முதல்வரின் பதில்- விஜய் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு
கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
பலரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை கரூர் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, ஒரு அரசியல் கூட்டத்தில் இத்தனை பேர் உயிரிழப்பு என்பது இதுவரை நடக்காதது, இனிமேலும் நடக்கக்கூடாது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாய் வழங்கப்படும்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படவுள்ளது.
விஜய் கைது செய்யப்படுவாரா இல்லையா என நீங்கள் கேட்கும் எந்த எண்ணத்திற்கும் நான் ஒத்துழைக்கத் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே விஜய்யின் நீலாங்கரை வீட்டிற்கு பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்திக்கையில், “தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூட்ட நெரிசல் குறித்து விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.