இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா வழக்கு: பிரித்தானிய நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சுவிஸ் வங்கியில் பெற்ற கடனைத் திரும்பச் செலுத்தாத இந்திய தொழிலதிபரின் வீட்டை எடுத்துக்கொள்ள பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று அவ்வங்கிக்கு அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
விஜய் மல்லையா, சுவிஸ் வங்கியான UBS வங்கியில் 20.4 மில்லியன் பவுண்டுகள் கடன் பெற்றுள்ளார். அதற்காக லண்டனிலுள்ள பல மில்லியன் மதிப்புள்ள தனது வீட்டை அடமானம் வைத்திருந்தார் அவர்.
ஆனால், அவர் தான் வாங்கிய கடனை முழுமையாக செலுத்தித் தீர்க்கவில்லை. ஆகவே, கடந்த ஒக்டோபரில் UBS வங்கி மல்லையா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்நிலையில், மல்லையா செலுத்தவேண்டிய கடனுக்காக லண்டனிலுள்ள அவரது வீட்டை எடுத்துக்கொள்ள UBS வங்கிக்கு பிரித்தானிய நீதிமன்றம் ஒன்று அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கவும், மேல் முறையீடு செய்ய அனுமதியளிக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஆகவே, மல்லையாவும் அவரது குடும்பத்தினரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.