முதல்வருக்கு மறந்து விட்டதா? - தவெக சிறப்பு பொதுக்குழுவில் விஜய் கேள்வி
தவெக சிறப்பு பொதுக்குழுவில், தமிழக முதல்வர் ஸ்டாலினை விஜய்கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக சிறப்பு பொதுக்குழு
தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

இதில், தவெக தலைவர் விஜய், பொதுச்செயலாளர் ஆனந்த், பிரச்சார மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கடராமன், கொள்கை பரப்பு செயலாளர் அருண்ராஜ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சிறப்பு பொதுக்குழுவில், கரூர் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல், விஜய்க்கு கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்பட்டன.
அதைத்தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினார். இறுதியாக தவெக தலைவர் விஜய் பேசினார்.
வன்மத்தை கக்கிய முதல்வர்
இதில் பேசிய விஜய், "இத்தனை நாட்களாக சொல்ல முடியாத வேதனையில் இருந்து வந்தோம். அதனால் தான் அமைதி காத்து வந்தோம். ஆனால் நம்மளை சுற்றி வன்ம அரசியல், அர்த்தமற்ற அவதூறுகள் அதிகமாக பரப்பப்பட்டன. இவை அனைத்தையும் சட்டம் மற்றும் சத்தியத்தின் துணை கொண்டு அகற்றுவோம்.

தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக இருந்த உரைக்கு நாகரிகமாக பதிலடி கொடுக்க விரும்புகிறேன். அரசியல் செய்ய விருப்பமில்லை அரசியல் செய்ய விருப்பமில்லை என கூறிய முதல்வர், தமிழக சட்டமன்றத்தில் நமக்கு எதிராக பேசிய பேச்சில் வன்மத்தை கக்கியதையும் எப்படி பட்ட அரசியல் செய்ய முயல்கிறார் என்பதை தமிழக மக்கள் உணராமலா இருப்பார்கள்?
மனிதாபிமானம், அரசியல் அறம், மாண்பு என எதுவுமே இல்லாமல் அரசியல் ஆதாய ஆட்டத்தை ஆடத் தொடங்கிவிட்டார் முதல்வர். பெருந்தன்மையை பெயரளவிற்கு மட்டுமே பேசுபவர் முதலமைச்சர். இந்தியாவில் எந்த தலைவருக்கும் விதிக்கப்படாத நிபந்தனைகளை காவல்துறை என்னுடைய பிரச்சாரத்திற்கு விதித்தது.
முதல்வருக்கு சில கேள்விகள்
அரசியல் காழ்ப்புடன், நேர்மை அற்று, குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு சில கேள்விகள். கரூர் சம்பவம் தொடர்பாக, ”நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடும்” என்றும், ”நியாயமான விசாரணை மூலமே இந்த சந்தேகத்தை மீட்டெடுத்தாக வேண்டும்” என்றும் உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் தலையில் ஓங்கி நறுக்கு நறுக்கு நறுக்கு என்று குட்டியதை முதல்வர் மறந்துவிட்டாரா?

இந்த கபட நாடக திமுக அரசின் பொய்களை வாதிட முடியாமல் கோடிகளை கொட்டி அமர்த்தப்பட்ட வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் திக்குமுக்காடி நின்றதை முதல்வர் அறியவில்லையா?
கரூர் சம்பவத்திற்கு பிறகு அவசர அவசரமாக தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. பின்பு அரசு உயர் அதிகாரிகள் எங்களை பற்றி செய்தியாளர் சந்திப்பில் அவதூறு பரப்பினார்கள். ஆனால் தனிநபர் ஆணையம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் சாமர்த்தியமாக பேசுவதாக நினைத்து பேசி உள்ளார்கள். முதல்வர் அவர்கள் பேசியது எவ்வளவு பெரிய பொய் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மக்கள் புரிய வைப்பார்கள்
1969க்கு பிறகு சொல்ல வேண்டும் என்றால், எப்போது கட்சி அவர்கள் கைக்கு வந்ததோ, குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 1972 கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போய்விட்டது. அதற்குப் பிறகு, இந்த திமுக தலைமை எப்போதுமே இப்படித்தான் இருக்கிறது.

இப்போது நாங்கள் கேட்டோமே சில கேள்விகள், அதை நான் கேட்கவில்லை. சுப்ரீம் கோர்ட் கேட்கிறது. இந்த அரசு நடத்திய விசாரணையின் மேல் சந்தேகம் ஏற்படுகிறது என்றால் உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்.
இதெல்லாம் ஏன் எதற்காக என்று முதல்வருக்கு புரிகிறதா? இந்த அரசுக்கு மக்கள் மீதுள்ள நம்பிக்கை முழுவதுமாக மண்ணில் புதைந்து விட்டது. இதுவாவது முதல்வர் ஸ்டாலினுக்கு புரிகிறதா, இல்லையா? புரியவில்லை என்றால் தேர்தலில் தி.மு.க தலைமைக்கு மக்கள் இன்னும் ஆழமாக அழுத்தமாக புரிய வைப்பார்கள்.
அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்
அப்போது கூட இவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? 5 வருடத்திற்கு ஒரு வாட்டி பழக்க தோஷத்தில் ஒரு அறிக்கையை வெளியிடுவார்கள், மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என்று அறிக்கை வெளியிட்டு விட்டு அறிவாலயத்தில் போய் ஓடி ஒளிந்து கொள்வார்கள். .

இப்பொழுதே அந்த அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ‘மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம்” அந்த அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
போன பொதுக்குழுவில் சொன்னதை தான் இப்போதும் சொல்கிறேன். நமக்கு வந்த இடையூறு தற்காலிகம் தான். இப்போது சொல்கிறேன் 2026 தேர்தலில் இரண்டே இரண்டு நபர்களுக்கு தான் போட்டியே; ஒன்று திமுக இன்னொன்று தவெக. போட்டி வலுவாக மாற போகிறது; 100% வெற்றி நமக்கே" என பேசினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |