நடிகர் விஜய் சேதுபதி முதலமைச்சரை சந்தித்து வைத்த முக்கிய கோரிக்கை! வெளியான புகைப்படங்கள்
பிரபல திரைப்பட நடிகரான விஜய்சேதுபதியின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீவிரமாக பரவி நிலையில், அதன் பின்னணி என்ன என்பது தெரியவந்துள்ளது.
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி, ஒரு மாறுபட்ட நடிகராகவே இருந்து வருகிறார். எந்த ஒரு விஷயத்தையும் சொல்ல வேண்டும் என்றால், அதைப் பற்றி பயப்படமால் தைரியமாக மீடியாவிலோ அல்லது சமூகவலைத்தள பக்கத்திலோ சொல்லிவிடுவார்.
தற்போது இவர், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அப்போது அவர் இந்த படப்பிடிப்பின் இடையே, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது விஜய்சேதுபதி, முதலமைச்சர் ரங்கசாமியிடம், புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணம் தினசரி ரூபாய் ஐந்தாயிரம் என்று வசூலிக்கப்பட்டு வந்ததாகவும் ஆனால் தற்போது திடீரென 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இவ்வாறு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் சின்ன பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் எனவே கட்டணத்தை குறைக்க பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதி கோரிக்கையை கவனமுடன் கேட்டு கொண்ட முதல்வர் ரங்கசாமி அவர்கள் இது குறித்து விரைவில் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.