முதன்முறையாக போராட்ட களத்தில் விஜய்: பேசியது என்ன?
சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக தலைவரான விஜய் கலந்து கொண்டார்.
திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணமடைந்தார்.
இவரது மரணத்திற்கு நீதி கேட்டும், நான்கு ஆண்டுகளில் பொலிஸ் விசாரணையில் 24 பேர் உயிரிழந்தது குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிடக்கோரி இன்று சென்னை சிவானந்தா சாலையில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தவெக தலைவரான விஜய் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது,
அஜித்குமார் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞர், அக்குடும்பத்திற்கு நடந்த கொடுமைக்கு சிஎம் சாரி சொன்னார்கள். அது தப்பில்லை.
இப்பொழுது அதன் உடன் இதனையும் சேர்த்து சிஎம் சார் பண்ணிடுங்க. உங்களுடைய ஆட்சி காலத்தில் இதே மாதிரி பொலிஸ் விசாரணையில் 24 பேர் இறந்து போய் இருக்கிறார்கள், அந்த 24 பேர் குடும்பத்திற்கும் நீங்கள் சாரி சொன்னீர்களா? தயவு செய்து சாரி சொல்லிருங்க.
அஜித்குமார் குடும்பத்திற்கு நீங்க கொடுத்த நிவாரணம் மாதிரி இந்த 24 பேர் குடும்பத்திற்கும் கொடுப்பீங்களா, தயவு செய்து அதையும் கொடுத்துடுங்க.
சாத்தான் குளம் ஜெபராஜ், அந்த கேஸ் சிபிஐக்கு மாற்றிய போது பொலிசாருக்கு அவமானம் என்று சொன்னீர்கள். இன்றைக்கு நீங்க உத்தரவிட்டதற்கு பெயர் என்னங்க சார். அதே தானே அன்றைக்கு நீங்கள் சொன்னதும் இன்றைக்கு நடப்பதும்.
அதே சிபிஐ ஆர்எஸ்எஸ் பாஜகவின் கைபாவையாக தான் இருக்கிறது. ஏன் நீங்க அங்க போய் ஒளிந்து கொண்டு கொள்கிறீர்கள். தவெக சார்பாக நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என கேட்டு இருக்கிறோம், அந்த பயத்தில் மத்திய அரசின் ஆட்சிக்கு பின்னால் ஒளிந்து கொள்வதற்கு காரணம்.
எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு கேள்வி கேட்க வேண்டும் என்றால் நீங்கள் எதற்கு சார்? உங்கள் ஆட்சி எதற்கு சார்? நீங்கள் உட்கார்ந்து இருக்கும் சிஎம் பதவி எதற்கு சார்?
எப்படி கேள்வி கேட்டாலும் உங்களிடம் இருந்து எந்த பதிலும் வரப்போவது இல்லை. பதில் இருந்தால் தானே வரும், உங்களிடம் இருந்து வரும் பதில் சாரிம்மா, தெரியாம நடந்துருச்சுமா, இல்லை என்றால் நடக்ககூடாதது நடந்துருச்சுமா, சாரிம்மா, அவ்வளவு தானே?
இந்த வெற்று விளம்பர மாடல் திமுக சர்கார், இப்போது சாரிம்மா மாடல் சர்காராக மாறிடுச்சு. இந்த அரசு ஆட்சியை விட்டு போவதற்குள் நீங்கள் செய்த தப்பிற்கு எல்லாம் பரிகாரமாக சட்டம் ஒழுங்கை சரி செய்ய வேண்டும்.
இல்லை என்றால் மக்களோடு மக்களாக ஒன்றாக நின்று உங்களை சரிசெய்ய வைப்போம், தவெக சார்பில் அதற்கான அத்தனை போராட்டங்களும் எடுத்து நடத்தப்படும் நன்றி