கரூர் செல்லும் முதல்வர் விஜய்? பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க திட்டம்
முதல்வர் விஜய் ஜூலை 2 2வது வாரத்தில் கரூருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் செல்லும் முதல்வர் விஜய்?
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. தவெக தலைவர் விஜய் முதல்வராவதற்கு முன்னர் டெல்லிக்கு சென்று வழக்கு விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வந்தார்.

மேலும், கூட்ட நெரிசல் ஏற்பட்ட உடன் அங்கிருந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல் விஜய் உடனடியாக தனி விமானம் மூலம் சென்னை சென்றதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறிய விஜய், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றுக்கு அழைத்து வந்து அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விஜய் அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு, அவர்களுடைய மருத்துவ செலவு, கல்விச் செலவுகளை ஏற்பதாகவும், வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்பட்டது.
விஜய் கரூருக்கு சென்று சந்திக்காமல் பாதிக்கப்பட்டவர்களை சென்னைக்கு வர வைத்து சந்திப்பதா என சர்ச்சை எழுந்தது. விஜய் கரூர் செல்ல காவல்துறை பாதுகாப்பு வழங்கவில்லை என தவெக தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது.

தற்போது, விஜய் முதல்வர் ஆகியுள்ள நிலையில், வரும் ஜூலை 2வது வாரத்தில் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |