கடுமையாக விமர்சித்த நிலையில் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விஜய்
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து சீமான் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் கட்சியின் தலைவர் விஜய் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீமானுக்கு வாழ்த்து
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக விக்கிரவாண்டியில் நடந்த மாபெரும் அரசியல் மாநாட்டில் பேசிய விஜய், "கொள்கை கோட்பாட்டு அளவில் திராவிடத்தையும், தமிழ் தேசியத்தையும் பிரித்து பார்க்கப் போவது இல்லை. திராவிடமும், தமிழ் தேசியமும் இந்த மண்ணோட இரண்டு கண்கள்" என்று பேசியிருந்தார்.
இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் விமர்சனம் செய்திருந்தார். அவர் பேசுகையில், "திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என்று சொல்கிறார்கள். ஒன்று ஆற்றில் கால் வைக்க வேண்டும், இல்லையென்றால் சேற்றில் கால் வைக்க வேண்டும்.
ஒரு சாலையில் இடதுபுறம் அல்லது வலது புறம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி மோதிவிடும். இது நடுநிலை அல்ல, மிக கொடுமையான நிலை" என்று விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஆண்டும் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் இந்த ஆண்டும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாநாட்டின் போது யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கும் அரசியலை தான் செய்யப்போவதில்லை என விஜய் பேசியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |