எனக்கு ஒன்றும் ஆகாது! எவ்வளவோ பார்த்துட்டோம், இதெல்லாம் ஒன்றுமேயில்லை: நடிகர் விக்ரம்
கோப்ரா படத்தின் இசை வெளியிட்டு விழாவில் தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகர் விக்ரம் பேசினார்.
சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு மாரடைப்பு என பல ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அதனைத் தொடர்ந்து விக்ரமின் மகன் துருவ், தனது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில் நேற்று நடந்த கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட விக்ரம், தன்னை பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அவர் கூறும்போது, 'எனது ரசிகர்கள், குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கு எதுவும் ஆகாது. எவ்வளவோ பார்த்துவிட்டோம். இதெல்லாம் ஒன்றுமில்லை என்பதால் வதந்திகள் பற்றி கவலைப்படவில்லை.
20 வயதாக இருக்கும்போது காலை இழக்க வேண்டிய தருணம் வந்தது. ஆனால் அதிலிருந்து மீண்டு வந்தேன். எனவே அதை பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே கிடையாது. சிறிய அசௌகரியத்தால் மருத்துவமனை செல்ல நேர்ந்தது. ஆனால் அதனை இந்த அளவுக்கு கொண்டுசென்றுவிட்டார்கள்.
இதனால் என்னை நேசிக்கும் சிலர் சங்கடங்களை சந்தித்தனர். அவர்கள் அனைவருக்காகவும், நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லவே இந்த மேடைக்கு வந்துள்ளேன்.
நான் எப்போதும் சினிமாவுக்காகவே வாழ்வேன். மற்றதை காட்டிலும் எனக்கு சினிமா தான் உயிர்' என தெரிவித்தார்.