பல நூற்றாண்டுகளாக தீபாவளி கொண்டாடாத கிராமம்.., பின்னணியில் இருக்கும் கர்ப்பிணியின் சாபம்
சாபத்திற்கு பயந்து பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உள்ள கிராமம் ஒன்றில் தீபாவளி பண்டிகை கொண்டாடாமல் உள்ளனர்.
தீபாவளி கொண்டாடாத கிராமம்
இந்தியா முழுவதும் தீபாவளி திருநாளான நேற்று கொண்டாட்டங்கள் களைகட்டின. மக்கள் அனைவரும் புத்தாடை கட்டி, இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஆனால், இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பல நூற்றாண்டுகளாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவில்லை.
இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் மாவட்டத்தில் சம்மூ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு திருமணமான பெண் ஒருவர் கர்ப்பிணியாக இருந்தபோது தீபாவளி கொண்டாடுவதற்கு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது, மன்னனின் அரசவையில் சிப்பாயாக பணிபுரிந்து வந்த அவரது கணவர் திடீரென இறந்து விட்டார். இந்த செய்தி கர்ப்பிணி மனைவிக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண், தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அப்போது அந்த கர்ப்பிணி பெண், அந்த கிராம மக்கள் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று சபித்ததாக புராண கதைகள் கூறுகிறது.
இதனால், அப்போது இருந்து இந்த கிராமத்தில் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதில்லை. தீபாவளி நாளில் வீடுகளில் தீபம் ஏற்றுவதில்லை. மீறி கொண்டாடினால் கிராம மக்களுக்கு துரதிஷ்டமும், பேரழிவும் ஏற்படும் என்று அங்குள்ள பெரியவர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |