பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோரும் கிராமம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு பின்னணி
இங்கிலாந்திலுள்ள கிராமம் ஒன்று பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.
சுதந்திரம் கோரும் பிரித்தானிய கிராமம்
இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரிலுள்ள பிடிங்டன் என்னும் கிராமம், பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது.

அதாவது, பிடிங்டனுக்கு அருகிலுள்ள பைசெஸ்டர் என்னுமிடத்தில் ஒரு ராணுவ தளம் உள்ளது.
அந்த ராணுவ தளத்தை சுமார் 3.750 புகலிடக்கோரிக்கையாளர்கள் தங்கும் முகாமாக மாற்ற பிரித்தானிய உள்துறை அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
ஆக, தங்கள் கிராமத்துக்கு அருகில் புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளனர் பிடிங்டன் கிராம மக்கள்.
தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைப்பது குறித்து தங்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்று கூறும் அக்கிராமத்தினர், பொதுவாக்கெடுப்பு நடத்தலாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்கள்.
அந்த வாக்கெடுப்பில், பொதுவாக்கெடுப்பு நடத்தலாம் என மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் கோருவது தொடர்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர் அக்கிராம மக்கள்.
விடயம் என்னவென்றால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, அப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தினாலும், அரசும் நாடாளுமன்றமும் ஒப்புதலளித்தால் மட்டுமே அக்கிராமம் சுதந்திரம் பெற முடியும்.
என்றாலும், இது தங்களைக் கலந்தாலோசிக்காமலே, தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைக்க உள்துறை அலுவலகம் முடிவெடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக பிடிங்டன் மக்கள் மேற்கொள்ளும் ஒரு அடையாள நடவடிக்கை என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம்.
அதாவது, தங்கள் கிராமத்துக்கு அருகே புகலிடக்கோரிக்கையாளர்கள் முகாம் அமைவதை பிடிங்டன் மக்கள் விரும்பவில்லை என்பதை அரசுக்கு தெரியப்படுத்துவதற்காகவே இந்த வாக்கெடுப்பு குறித்த அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |